"நடு ரோட்டில்.. காவி வேட்டியில்" - தண்ணி காட்டிய ராஜேந்திர பாலாஜி பிடிபட்டது எப்படி? - பரபர பின்னணி!

 
ராஜேந்திர பாலாஜி கைது

மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டிருக்கிறார். 20 நாட்களாக தலைமறைவாகியிருந்த அவரை கர்நாடகாவில் வைத்து காவல் துறையினர் கைது செய்து இருக்கின்றனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி,  ஆவின் உள்ளிட்ட அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக சுமார் ரூ.3  கோடி வரை  பணம் பெற்றுக்கொண்டு  மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது புகார் எழுந்தது.  புகாரின் பேரில் விருதுநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனையடுத்து கைதாவதிலிருந்து தப்பிக்க ராஜேந்திர பாலாஜி முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

ராஜேந்திர பாலாஜி
அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து ராஜேந்திர பாலாஜி தலைமறைவானார்... அதனைத்தொடர்ந்து  அவரைப் பிடிக்க  8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. பின்னர் தனது வழக்கறிஞர் மூலம்  அவர் உச்ச நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.  இதற்கு,  தங்களிடம் கருத்து கேட்காமல்  ராஜேந்திர பாலாஜிக்கு  ஜாமீன் வழங்கக்கூடாது  என தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. விமானம் மூலம் ராஜேந்திர பாலாஜி வெளிநாடுக்கு  தப்பிச்செல்வதைத் தடுக்க,  நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு  லுக் அவுட் நோட்டிஸை  காவல் துறை அனுப்பியது.  தொடர்ந்து  கடல் மார்க்கமாக தப்பிச் செல்வதாக தகவல் வெளியானதால், தூத்துக்குடி கடற்கரையில் இருந்து வேதாரண்யம்   வரையிலான கடற்கரை பகுதிகள் மற்றும் தனுஷ்கோடியில்  கண்காணிப்பை தீவிரப்படுதியது.

ராஜேந்திர பாலாஜி கைது

அதேபோல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநில எல்லைகளிலும்  தனிப்படை போலீசார் முகாமிட்டு தேடி வந்தனர். ஏற்கனவே அவர் பெங்களூருவில் பதுங்கியிருப்பதாக வெளியான தகவலின்படி  அங்கு போலீஸார் தேடுதல் வேட்டை நடத்தினர். இதற்கிடையே அவர் மீது மேலும் 5 மோசடி வழக்குகள் பதிவாகின.  மேலும் டெல்லியில் பதுங்கியிருப்பதாகக் கூறி அங்கும் விரைந்து ராஜேந்திர பாலாஜியை தேடிவந்தனர். இருப்பினும் தொடர்ச்சியாக  ராஜேந்திர பாலாஜி காவல் துறைக்கு டிமிக்கி கொடுத்து வந்தார்.  


இந்நிலையில் தற்போது முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டிருக்கிறார். கடந்த 20 நாட்களாக தலைமறைவாகியிருந்த அவரை கர்நாடகா மாநிலம் ஹசன் பகுதியில் பதுங்க முயன்ற அவரை காவல் துறையினர் மடக்கிப் பிடித்து  கைது செய்திருக்கின்றனர்.. கைது செய்யப்பட்ட ராஜேந்திர பாலாஜியை ஹசன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு, தமிழ்நாடு அழைத்து வர தனிப்படை போலீசார் திட்டமிட்டுள்ளனர். அவருடைய முன் ஜாமீன் மனு நாளை விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..