சிங்கப்பூர் மருத்துவமனையில் எ.வ.வேலு அனுமதி!
உடல்நலக்குறைவு காரணமாக சிங்கப்பூர் மருத்துவமனையில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில், 2021 முதல் 2026 வரை நடந்த, தி.மு.க., ஆட்சியில், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்தவர் வேலு. தற்போது, திருவண்ணாமலை தொகுதி எம்.எல்.ஏ.,வாக உள்ளார். இவர் அமைச்சராக இருந்தபோது, நெடுஞ்சாலைத் துறையில், சாலை அமைக்காமலே, பணம் எடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, அறப்போர் இயக்கம், சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் அலுவலகத்தில், கடந்த 2022ம் ஆண்டு புகார் அளித்தது. அதன் அடிப்படையில் கரூரில், சாலையே போடாமல், 3.23 கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதாக, தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலு உள்ளிட்ட 11 பேர் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.கடந்த 25 ம் தேதி, சென்னை, ஆழ்வார்பேட்டை லாப்தி காலனியில் உள்ள வேலு வீடு உட்பட நான்கு இடங்களிலும், கரூரில் ஏழு, திண்டுக்கல்லில் இரண்டு, கோவையில் இரண்டு, திருப்பூரில் ஒன்று என, 20 இடங்களில், லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தினர். முடிவில், 40 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
இந்நிலையில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை விசாரணைக்கு ஆஜராக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சம்மன் அனுப்பியிருந்த சூழலில், உடல்நிலையை காரணம் காட்டி அவர் விசாரணைக்கு இன்று ஆஜராகவில்லை. எ.வ.வேலு சார்பில் ஆஜரான அவரது வழக்கறிஞர், உடல்நலக்குறைவு காரணமாக சிங்கப்பூர் மருத்துவமனையில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சிகிச்சை பெறுவதாக கூறினார். இருதய தொடர் சிகிச்சை பெறுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

