3 மடங்கு அதிக வாக்குகள் பெற்ற ஈவிகேஎஸ்.. இதுவரை நடந்த தேர்தல் வெற்றி வித்யாசத்தைவிட அதிக வாக்குகள்..

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் , அதிமுகவை விட 3 மடங்கு அதிக வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 27ம் தேதி நடந்து முடிந்தநிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மொத்தம் 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 வாக்குகள் பதிவாகியிருக்கிறது. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி ஈரோடு சித்தோடு ஐ.ஆர்.டி.டி. கல்லூரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சரியாக காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி , 2 அறைகளில் 16 மேசைகள் அமைக்கப்பட்டு மொத்தம் 15 சுற்றுகளாக எண்ணப்பட்டு வருகிறது. 3வது சுற்று எண்ணிக்கை நிறைவு பெற்றுள்ளது.
வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் வெளியாகி வரும் சூழலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், 22 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். அதன்படி 3 சுற்றுகள் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் 32,959 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 10,727 வாக்குகள் பெற்று 2வது இடத்திலும், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா 1,832 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்திலும் உள்ளனர். தேமுதிக சார்பில் போட்டியிட்ட ஆனந்த் 220 வாக்குகள் பெற்றுள்ளார்.
இதில் அதிமுக வேட்பாளரை விட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் 3 மடங்கு அதிக வாக்குகள் பெற்றுள்ளார். ஈரோடு கிழக்கில் இதுவரை நடந்த தேர்தல்களின் வெற்றி வித்தியாசத்தை விட அதிக வாக்குகளுடன் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் இருந்துவருகிறார். அவர் 22 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் முன்னிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.