முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் எம்.எல்.ஏ.வாக பதவியேற்றார் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

 
EVKS Elangovan EVKS Elangovan

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா மாரடைப்பால் உயிரிழந்ததை தொடர்ந்து அந்த தொகுதி காலியானது. இதனை தொடர்ந்து அந்த தொகுதிக்கு பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார். அதிமுக சார்பில் தென்னரசு போட்டியிட்டார். இதேபோல் நாம் தமிழர் கட்சி, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும் போட்டியிட்டனர். நடந்து முடிந்த இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 02ம் தேதி நடைபெற்றது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். 

இந்த நிலையில், இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், இன்று எம்.எல்.ஏவாக பதவி ஏற்றார். அவருக்கு சபாநாயகர் அப்பாவு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்கனவே, கடந்த 1984-ம் ஆண்டு சட்டப்பேரவை உறுப்பினராக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இருந்துள்ளார். தற்போது, 38 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவைக்குள் நுழைகிறார்.