இவ்வளவு பெரிய வெற்றியை எதிர்பார்க்கவில்லை- இளங்கோவன்

 
evks elangovan

ஈரோடு கிழக்கு தொகுதியில் இவ்வளவு பெரிய வெற்றியை எதிர்பார்க்கவில்லை என காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

பதிவான ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 192 வாக்குகளில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 556 வாக்குகளை பெற்று ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,981 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 8 ஆயிரத்து 474 வாக்குகளும் பெற்றுள்ளனர். கடந்த தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட யுவராஜ் 58 ஆயிரத்து 396 வாக்குகள் பெற்றிருந்தார். த.மா.கா வேட்பாளர் யுவராஜைவிட தற்போது 15 ஆயிரம் வாக்குகள் குறைவாக அதிமுக வேட்பாளர் தென்னரசு பெற்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் ஈரோடு கிழக்கு தொகுதியை திமுக தக்க வைத்துள்ளது.

இநிந்லையில் வாக்கு எண்ணிக்கைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், “இடைத்தேர்தல் வெற்றி எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால், இவ்வளவு பெரிய அளவில் இருக்கும் என எதிர்பார்க்கவில்லை. மிகப்பெரிய வெற்றியை ஈரோடு மக்கள் தந்திருக்கிறார்கள். எனக்கு கிடைத்த வெற்றி என்பதை விட, முதலமைச்சர் ஸ்டாலினின் ஆட்சிக்கு கிடைத்த வெற்றி இது. ஈரோடு இடைத்தேர்தல் வெற்றிக்கு ஸ்டாலின்தான் காரணம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான சட்டப்பேரவையில் பங்கேற்பது பெருமையாக உள்ளது. மக்களுக்காக மகன் செய்ய நினைத்த திட்டங்களைச் செயல்படுத்துவேன். ஆட்சிக்கு வந்த 20 மாதகாலத்தில் கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பாலனவைகளை நிறைவேற்றியதற்காக பரிசு இது” எனக் கூறினார்.