‘எல்லோருக்கும் எல்லாம்’ - இபிஎஸ், உதயநிதி சுதந்திர தின வாழ்த்து..
78வது சுதந்திரதினத்தையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் 78வது சுதந்திர தினம் கோலாலகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “இந்திய திருநாட்டின் 78வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தில், ஆங்கிலேயர் ஆதிக்கத்தை எதிர்த்து களம் கண்டு தியாகத்தின் விளைவாக நம் நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத் தந்த விடுதலை வேள்விக்கொண்ட தீரர்களை நினைவுகூர்வதுடன்,
நம் நாட்டின் அடிப்படை விழுமியங்களான ஜனநாயகம், கூட்டாட்சி, சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக்காக்கவும், அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற்ற வல்லரசாக நம் நாட்டை கட்டமைக்கவும் உறுதியேற்போம். இந்தியத் திருநாடு வாழியவே! தமிழ்நாடு வாழியவே!” என்று குறிப்பிட்டுள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “இந்திய ஒன்றியத்தின் 78-ஆவது விடுதலைத் திருநாளில் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மாபெரும் அடக்குமுறைகளை எல்லாம் வீரத்தாலும் - தியாகத்தாலும் வீழ்த்திய வரலாற்றின் சாட்சியே இந்நாள். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக, தனக்கான சுயாட்சி அத்தியாயத்தை இந்தியா எழுதத் தொடங்கிய இப்பொன்னாளைப் போற்றிடுவோம்.
நாட்டையும், நாம் பெற்ற சுதந்திரத்தையும் பேணிக் காக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. ஜனநாயகம், மதச்சார்பின்மை, சகோதரத்துவம், சமத்துவம் ஆகியவற்றை நீர்த்துப் போகச் செய்யும் எந்த முயற்சியையும் முறியடிப்போம்.
அரசியலமைப்பின் துணைகொண்டு ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற நிலையை ஏற்படுத்திடும் வகையில், அயராது உழைக்க இந்நாளில் உறுதியேற்போம்.” என்று தெரிவித்துள்ளார்.