பார்த்தவர்களே உறைந்து போன நிமிடம்..! கார்கள் அடுத்தடுத்து மோதி அந்தரத்தில் பறந்த பைக் ஓட்டுநர்!
ஆந்திரப் பிரதேச மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள சாலை சந்திப்பு ஒன்றில், அடுத்தடுத்த நொடிகளில் இரண்டு எஸ்யூவி (SUV) கார்கள் மோதி அந்தரத்தில் தூக்கி வீசப்பட்ட பைக் ஓட்டுநர், சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரங்கம்பேட்டை மண்டலம் பெத்தராயவரம் அருகே உள்ள ஏடிபி (ADB) சாலையில், நவீன் என்பவர் தவறான திசையில் (Wrong side) இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றபோது இந்தக் கோர விபத்து நிகழ்ந்துள்ளது.
அருகிலுள்ள பெட்ரோல் பங்கில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளில், எதிர்த்திசையிலிருந்து சாலை சந்திப்பிற்குள் நுழைந்த நவீனின் பைக் மீது முதலில் வெள்ளை நிற எஸ்யூவி கார் ஒன்று வேகமாக மோதுகிறது. அதனைத் தொடர்ந்து சில நொடிகளிலேயே மற்றொரு மஹிந்திரா தார் (Mahindra Thar) வாகனமும் அவர் மீது மோதியது. இந்தப் பயங்கர மோதலின் வேகத்தில் நவீன் அந்தரத்தில் தூக்கி வீசப்பட்டு, தலைகீழாகச் சுழன்று சாலையில் விழுந்தார்.
விபத்தின் தீவிரத்தைப் பார்த்த அங்கிருந்தவர்கள் நவீனுக்குப் பலத்த காயம் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சினர். ஆனால், யாருமே எதிர்பாராத விதமாக நவீன் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விபத்து நடந்த சிறிது நேரத்திலேயே சாலையில் இருந்து எழுந்த அவர், தனது இருசக்கர வாகனத்தைத் தூக்கிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. உயிரைப் பணயம் வைக்கும் வகையில் தவறான திசையில் வாகனம் ஓட்டியதால் நிகழ்ந்த இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

