விடியல் பயண திட்டம் மூலம் ஒவ்வொரு மகளிரும் ரூ.50,000 சேமிப்பு - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!!

 
மகளிர் விடியல் பேருந்து - ஸ்டாலின்


 விடியல் பயணத் திட்டத்தால் 51 மாதங்களில் ஒவ்வொரு மகளிருக்கும் ரூ.50,000 சேமித்துள்ளதாக வீடியோவைப் பகிர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.  


தமிழகத்தில் மகளிருக்காக ‘விடியல் பயணத் திட்டம்’ என கட்டணமில்லா பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக 7,671 மகளிர் விடியல் பயண பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.  அதிகபட்சமாக சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தில் 1,711 பேருந்துகளும், அடுத்தபடியாக கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில் 1,277 பேருந்துகளும், விழுப்புரம் போக்குவரத்து கழகத்தில் 1047, சேலம் போக்குவரத்து கழகத்தில் 854, கோவை போக்குவரத்து கழகத்தில் 1,130, மதுரை போக்குவரத்து கழகத்தில் 938, திருநெல்வேலி போக்குவரத்து கழகத்தில் 714 என ஒட்டுமொத்தமாக 7,671 பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு போக்குவரத்து துறை  தெரிவித்துள்ளது. 

பேருந்து

இந்நிலையில் , விடியல் பயணத்தின் மூலம் ஒவ்வொரு மகளிரும் ரூ. 50 ஆயிரம் வரை சேமித்துள்ளதாக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “வீட்டவிட்டு வெளிய போயிட்டு வரணும்னாலே 50 ரூபாய் தேவை. நான் வீட்டுலயே இருந்துக்குறேன்” என்ற எண்ணத்தை - பொருளாதாரத் தடையைத் தகர்த்து, கல்விக்கான - வேலைவாய்ப்புக்கான - முன்னேற்றத்துக்கான பயணத்தைச் சாத்தியமாக்கியது  விடியல் பயணம்!

நமது திராவிட மாடலின்  51 மாதங்களுக்குள் விடியல் பயணத்தின் மூலம் நமது சகோதரிகள் 50 ஆயிரம் ரூபாய் வரை சேமித்துள்ளதும் - அந்தத் திட்டத்துக்கு அரசு செலவழிப்பதும், மகளிர் முன்னேற்றத்துக்கான முதலீடு!” என்று குறிப்பிட்டுள்ளார்.