ஈரோடு வாக்கு எண்ணிக்கை: 7 டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை..

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற உள்ள நிலையில் 7 டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 27-ந் தேதி நடைபெற்றது. தொகுதி முழுவதும் 238 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், மொத்தம் 74.79 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை சித்தோடு ஐ.ஆர்.டி.டி. கல்லூரியில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற இருக்கிறது. இங்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையையொட்டி அந்தக் கல்லூரியின் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணும் மையமான ஐ.ஆர்.டி.டி. கல்லூரியை சுற்றுவட்டாரத்தில் உள்ள எலவுமலை, சுண்ணாம்பு ஓடை, சித்தோடு ஆகிய இடங்களில் உள்ள 7 டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க இருக்கிறது. மாவட்ட தேர்தல் அதிகாரியும் ஆட்சியருமான கிருஷ்ணனுன்னி முன்னிலையில் காப்பு அறை சீல் திறக்கப்பட்டு, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு என்னும் அறைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இந்த வாக்கு என்னும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட உள்ளனர். மொத்தம் 15 சுற்றுகளாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.