ஈரோட்டில் பாலத்திற்கு அடியில் தூங்கிய குழந்தையை கடத்திய தம்பதி! 25 நாட்களுக்குப் பிறகு சிக்கியது எப்படி?

 
ச் ச்

ஈரோடு அருகே  சாலையோரம் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த ஒன்றரை வயது பெண் குழந்தை கடத்திய வழக்கில் கணவன் மனைவியை போலீசார் கைது செய்து குழந்தையை மீட்டனர். பத்துக்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளில் இவர்கள் தொடர்புடைய நிலையில், 5 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் திட்டமிட்டு இரவோடு இரவாக கணவன் மனைவி இருவரும் பைக்கில் வந்து குழந்தையை திருடி சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலத்தின் அடியில் ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த பலர் குடும்பமாக தங்கி துடைப்பம் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இவர்களில் வெங்கடேசன்-கீர்த்தனா தம்பதியினர் வழக்கம் போல் கடந்த மாதம் 16.ம் தேதி தங்களது ஒன்றரை வயது பெண் குழந்தை வந்தனாவுடன் தூங்கி கொண்டிருந்த போது குழந்தை காணாமல் போனது. கொசுவலையை அறுத்து மர்ம நபர்கள் குழந்தையை திருடி சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக ஏழு தனிப்படைகள் அமைத்து போலீசார் குழந்தையை தேடி வந்தனர். அந்தப் பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததுடன், குழந்தை கடத்தல் பழங்குற்றவாளிகளிடமும் விசாரணை நடத்தினர். 

இந்நிலையில் 25 நாட்களுக்குப் பிறகு குழந்தை நாமக்கல்லில் இருப்பதை கண்டறிந்த போலீசார் குழந்தையை மீட்டு வந்து பவானி காவல் நிலையத்தில் வைத்து அதன் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். குழந்தையை காணாமல் பரிதவித்த பெற்றோரும் உறவினர்களும் உச்சிமுகர்ந்து குழந்தையை பெற்றுக் கொண்டனர். மீட்டுக் கொடுத்த காவல்துறையினருக்கும் விழுந்து வணங்கி நன்றியை தெரிவித்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் குழந்தையை கடத்திய ரமேஷ் மற்றும் அவரது மனைவி நித்யா ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.


அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஏற்கனவே இருவரும் சேலத்தில் குழந்தை கடத்திய வழக்கில் கைதாகி ஜாமினில் வெளியே வந்திருப்பதும், ரமேஷ்க்கு 10.க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளில் தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. பொள்ளாச்சியை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்த ரமேஷ்  அவரை விட்டு பிரிந்து, நித்யாவை 5 ஆண்டுகளுக்கு முன் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இரண்டு முறை குழந்தைகள் பிறந்து உயிரிழந்து விட, உடல் நலம் பாதித்த நித்யாவிற்கு இனி குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தனக்கு குழந்தை வேண்டும் என நித்யா கூறியதால், திருட செல்லும் இடங்களில் குழந்தைகளை நோட்டமிட்டு வந்த ரமேஷ், ஏற்கனவே சேலத்தில் குழந்தையை கடத்தி பிடிபட்டுள்ளார். இரண்டாவதாக பவானியில் சாலையோரம் தங்கியுள்ளவர்களிடம் இருந்து குழந்தையை கடத்தி இருவரும் மீண்டும் பிடிபட்டுள்ளனர். குழந்தையை வளர்ப்பதற்காக கடத்தியதாக இருவரும் கூறிய போதிலும், விற்பனை செய்ய திட்டமிட்டார்களா.? இதில் வேறு யாருக்கேனும் தொடர்புள்ளதா எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட இருவரும் ஈரோடு கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் சிறை காவலுக்கு் அனுப்பி வைக்கப்பட்டனர்.