இபிஎஸ் வகுக்கும் மாஸ்டர் பிளான்..! மாவட்ட வாரியாக அதிமுக நிர்வாகிகளை சந்திக்க திட்டம்..!
அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வரும் ஜூலை 06- ஆம் தேதி முதல் ஜூலை 09- ஆம் தேதி வரை சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தஞ்சாவூர், சிவகங்கை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், தருமபுரி, ஈரோடு, திருச்சி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் அதிமுக நிர்வாகிகளுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
அதன்படி, நாள்தோறும் மூன்று அமர்வுகளாக ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன. வரும் ஜூலை 06- ஆம் தேதி காலை 10.00 மணிக்கு தஞ்சாவூர் மாநகர், தஞ்சாவூர் கிழக்கு நிர்வாகிகளுடனும், காலை 11.30 மணிக்கு தஞ்சாவூர் மத்திய, தஞ்சாவூர் தெற்கு நிர்வாகிகளுடனும், மாலை 04.30 மணிக்கு சிவகங்கை நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன.
ஜூலை 07- ஆம் தேதி காலை 10.00 மணிக்கு இராணிப்பேட்டை கிழக்கு, இராணிப்பேட்டை மேற்கு நிர்வாகிகளுடனும், காலை 11.30 மணிக்கு திருப்பத்தூர் நிர்வாகிகளுடனும், மாலை 04.30 மணிக்கு திருவள்ளூர் வடக்கு, திருவள்ளூர் மத்திய நிர்வாகிகளுடனும், ஜூலை 08- ஆம் தேதி காலை 10.00 மணிக்கு கிருஷ்ணகிரி மேற்கு, கிருஷ்ணகிரி கிழக்கு நிர்வாகிகளுடனும், காலை 11.30 மணிக்கு தருமபுரி கிழக்கு, தருமபுரி மேற்கு நிர்வாகிகளுடனும், மாலை 04.30 மணிக்கு ஈரோடு மாநகர் நிர்வாகிகளுடனும், ஜூலை 09- ஆம் தேதி காலை 10.00 மணிக்கு திருச்சி மாநகர் நிர்வாகிகளுடனும், திருச்சி புறநகர் வடக்கு நிர்வாகிகளுடனும், காலை 11.30 மணிக்கு திருச்சி புறநகர் தெற்கு, திருச்சி புறநகர் கிழக்கு நிர்வாகிகளுடனும், மாலை 04.30 மணிக்கு திருநெல்வேலி மாநகர், திருநெல்வேலி புறநகர் நிர்வாகிகளுடனும் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன.
இந்த ஆலோசனைக் கூட்டங்களில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்தும், அதிமுகவின் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிப் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது. சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதிக் கழகச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், சார்பு அமைப்புகளின் மாவட்டச் செயலாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தலைவர்கள் அனைவரும் தவறாமல் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்". இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் பலரும் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்துவது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

