பாஜகவுடனான கூட்டணி பின் திடீர் மனமாற்றம்- டிடிவிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றார் ஈபிஎஸ்

டிடிவி தினகரனுக்கு எதிரான வழக்கை திரும்பப் பெற்றார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
அதிமுக- பாஜகவுடன் கூட்டணி உறுதி செய்ததையடுத்து அதிமுகவில் உள்ள பல இஸ்லாமியர்கள் அக்கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அரசியல் களம் இப்போதே களை கட்ட தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக கடந்த 2023-ஆம் ஆண்டு பிரிந்த அதிமுக- பாஜக கூட்டணி தற்போது மீண்டும் ஒன்றிணைந்துள்ளது. அதிமுகவும் பாஜகவும் இணைந்து, அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள இருப்பதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். அதேசமயம் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டின் உரிமைகளை அ.தி.மு.க ஒருபோதும் விட்டுக் கொடுக்காது எனவும் 2026 தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் எனவும் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் பாஜகவுடனான கூட்டணி பின் திடீர் மனமாற்றமாக டிடிவி தினகரனுக்கு எதிரான வழக்கை திரும்பப் பெற்றார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.அதிமுகவின் கருப்பு-வெள்ளை கொடி, பெயர், ஜெயலலிதாவின் பெயர், புகைப்படம் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்க கோரிய வழக்கு வாபஸ் பெற்றதை அடுத்து, டிடிவி தினகரனுக்கு எதிரான வழக்கை முடித்து வைத்தது சென்னை அமர்வு நீதிமன்றம். அதிமுக-பாஜக கூட்டணி அமைந்துள்ள நிலையில், வழக்கை ஈபிஎஸ் வாபஸ் பெற்றது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது