"கொடுங்கோல் ஆட்சியில் முறையான கேள்வி கேட்டால், மரணம்தான் பதிலாக கிடைக்கிறது" - ஈபிஎஸ் ஆவேசம் !!

 
eps

சென்னை வில்லிவாக்கத்தில் தனியார் நிறுவனம் ஒன்று நடத்தி வருபவர் குப்புசாமி.  திருத்தணியில் இவர் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், இவரின் தந்தை நந்தன் அதிமுக திருத்தணி 15 ஆவது வட்ட துணை செயலாளராக உள்ளார்.  அத்துடன் மனித உரிமை கமிஷனின் மாவட்ட செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்.  இவர் கடந்த சில வாரங்களாக தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் பொங்கல் தொகுப்பை பெற்றுள்ளார். பொங்கல் தொகுப்பில் வழங்கப்பட்ட புளியில்  இறந்துபோன பல்லி இருந்ததாக ரேஷன் கடை ஊழியர்களிடம் கேட்டதுடன், இது குறித்து ஊடகங்களுக்கு தகவல் அளிக்க, புகைப்படத்துடன் செய்திகள் வெளியாகின. 

ttn

இதையடுத்து ரேஷன் கடை விற்பனையாளர் சரவணன் பொய் பிரசாரம் மூலம் அவதூறு பரப்புவதாக கூறி நந்தன் மீது திருத்தணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  அதன் அடிப்படையில் போலீசார் நந்தன்  பிணையில் வெளியில் வர முடியாத அளவுக்கு வழக்கு பதிவு செய்தனர். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால்  நந்தனின் மகனான குப்புசாமி திடீரென தனது வீட்டிற்கு சென்று அறையை மூடிக்கொண்டு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். தற்கொலைக்கு முயன்ற அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். இருப்பினும் குப்புசாமி சிகிச்சை பலனின்றி  மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 



இந்நிலையில் அதிமுக எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "பொங்கல் தொகுப்பில் பல்லி  இருந்ததாக கூறிய தன் தந்தை திரு.நந்தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் தற்கொலைக்கு முயன்ற திரு.குப்புசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது,  அவரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்களையும், வருத்தங்களையும், தெரிவித்து கொள்கிறேன்,வலைத்தளங்களில் பதிவிட்டால் குண்டர் சட்டம், உண்மையை கூறினால் ஜாமினில் வெளிவரா வழக்கு என திமுகஆட்சியில் ஜனநாயகத்தை முடக்கும் முயற்சி தொடர்கிறது,கொடுங்கோல் ஆட்சியில் முறையான கேள்வி கேட்டால், மரணம்தான் பதிலாக கிடைக்கிறது! இது தற்கொலை அல்ல,ஜனநாயக படுகொலை! " என்று பதிவிட்டுள்ளார்.