இபிஎஸ் ஷாக்..! ராஜினாமா கடிதம் அளித்த நகர செயலாளர்; அ.தி.மு.க., வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பரபரப்பு..!
கள்ளக்குறிச்சி அ.தி.மு.க., நகர செயலாளர் பாபு. கடந்த 22 ஆண்டுகளாக பொறுப்பில் உள்ளார். இவரது மனைவி அழகுவேல்பாபு கடந்த 2011 தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அடுத்து, 2016 தேர்தலில் அ.தி.மு.க.,வில் பிரபுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் வெற்றி பெற்றார்.ஜெ., மறைவுக்கு பின்பு கடந்த 2021 தேர்தலில் நகர செயலாளர் பாபு, தனது மனைவி அழகுவேலுக்கு மீண்டும் 'சீட்' எதிர்பார்த்தார். ஆனால் செந்தில்குமாருக்கு 'சீட்' வழங்கப்பட்டது.
இந்நிலையில், நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் நகர செயலாளர் பாபு, தனது மனைவி அழகுவேலுக்கு சீட் பெற முயற்சித்தார். ஆனால், மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் ராஜிவ்காந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் பாபு கடும் அதிருப்தி அடைந்தார்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி அண்ணா நகரில் உள்ள வி.ஏ.எஸ்., திருமண மண்டபத்தில் அ.தி.மு.க., வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது. சீட் கிடைக்காத விரக்தியில் இருந்த பாபு, வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பங்கேற்றார். கூட்டத்தில் கூட்டணி கட்சியினர் ஒவ்வொருவராக பேசியபோது, தனக்கு வாய்ப்பு கேட்டு எழுந்து பேசினார்.
அப்போது, தற்போது கடும் மன உலைச்சலில் உள்ளேன். ஒரு தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும் என்றும், போதும் என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். அ.தி.மு.க., வெற்றி பெற வேண்டும் என்பதில், எனக்கு எவ்வித மாற்று கருத்தும் இல்லை. ஆனால் இனி நகர செயலாளர் பதவியில் தொடர்ந்து பணியாற்ற எனக்கு மனமில்லை. அதற்கேற்ப எனது உடல் நிலையும் ஒத்துழைக்கவில்லை. இதுவரை எனக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி என்றார்.பின்னர், பாபு தனது ராஜினாமா கடித்தை மாவட்ட செயலாளர் குமரகுருவிடம் வழங்கினார். இரு பேசி கொள்ளலாம் என குமரகுரு கூறியும், வலுகட்டாயமாக கடிதத்தை வழங்கி விட்டு மேடையில் நிர்வாகிகளை பார்த்து கீழே விழுந்து வணங்கி விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.அக்கடிதத்தில், நான் அ.தி.மு.க., நகர செயலாளர் பதவியில் இருந்தும், மாவட்ட மகளிரணி தலைவர் பதவியில் இருந்து மனைவி அழகுவேலுவும் பல்வேறு மன உலைச்சல் காரணமாக கட்சி பணியாற்றிட இயலாது என்றும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து முழுமையாக விலகுகிறோம் என்று தெரிவித்திருந்தார்.
வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் நகர செயலாளர் ராஜினாமா கடிதம் வழங்கிய சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

