இபிஎஸ் ஷாக்..!! அதிமுகவில் இருந்து விலகிய கே.ஏ.கே.முகில்..!!

 
Q

2010ல் மறைந்த மூத்த அரசியல்வாதி கே.ஏ.கிருஷ்ணசாமியின் மகனும் அதிமுக அம்மா பேரவையின் இணைச் செயலாளராகவும் இருந்து வந்த கே.ஏ.கே.முகில், அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது தொர்பாக கே.ஏ.கே.முகில் வெளியிட்டுள்ள கடிதத்தில், கனத்த இதயத்துடன், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் மற்றும் நான் வகித்து வந்த அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக இக்கடிதத்தின் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன். திராவிட reஇயக்கத்துடனும் அ.தி.மு.க.வுடனும் எனது தொடர்பு, எனது குடும்பத்தின் வரலாற்றில் ஆழமாக வேரூன்றியது. தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றின் இரு முக்கியமான கட்டங்களுக்கு பங்களிக்கும் பெருமை கணியர் குடும்பத்திற்கு உண்டு.

எனது தந்தை கே.கே. கிருஷ்ணசாமி அவர்கள், அ.தி.மு.க. தொடங்கியபோது தலைவருக்கு பக்க பலமாக இருந்தவர், கட்சியின் முதல் அமைப்புச் செயலாளராகப் பணியாற்றியவர், கட்சியின் ஆரம்பகால அதிகாரப்பூர்வ நாளேடான “தென்னகம்” இதழின் ஆசிரியராகவும் வெளியிட்டாளராகவும் இருந்தார். நம் தலைவருக்கு “புரட்சித் தலைவர்” என்ற பட்டத்தை சூட்டிய வரலாற்றுச் சிறப்பும் அவருக்கு உண்டு. பின்னர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் ஆட்சிக் காலங்களில் சுமார் பதினைந்து ஆண்டுகள் அமைச்சராகப் பணியாற்றினார்.

எனது தந்தையின் மூத்த சகோதரர் கே.கே. மதியழகன் அவர்கள், பேரறிஞர் அண்ணா அவர்களோடு தி.மு.க.வின் ஐம்பெரும் தலைவர்களுள் ஒருவராக இருந்தவர். தமிழ்நாடு அமைச்சராகவும், சட்டமன்றத் தலைவராகவும் பணியாற்றியவர். அரசியல் வாழ்க்கை என்பது ஒரு சிறப்புரிமை அல்ல, ஒழுக்கத்துடனும், விசுவாசத்துடனும், கருணையுடனும் சுமக்க வேண்டிய ஒரு பொறுப்பு என்பதை நான் பிறந்து, வளர்ந்த சூழலிலேயே கற்றுக் கொண்டேன். 2009 - ஆம் ஆண்டு, ஒரு எதிர்பாராத தொலைபேசி அழைப்பு என் வாழ்க்கையின் வழிகாட்டியாக அமைந்தது.

அம்மா உங்களை போயஸ் கார்டனுக்கு வரச்சொன்னார்” என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. புரட்சித்தலைவி அம்மா அவர்களை நேரில் சந்தித்தபோது, ஒரு பெரும் பொறுப்பு என்னிடம் வழங்கினார். உன்னை கட்சியின் எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளராக நியமிக்கிறேன். உன் தந்தை, கட்சியிலும் - மக்களிடத்திலும், நன்மதிப்பைப் பெற்றவர். அவர் பெயரைக் காப்பாற்றும் விதத்தில், சிறப்பாக செயல்பட்டு, மக்கள்பணி ஆற்றவேண்டும்”என்று கூறி, வாழ்த்தினார்.

அந்த வார்த்தைகள், இன்றும், எனது அரசியல் வாழ்க்கையின் அஸ்திவாரமாக இருக்கின்றன. அதன் பின்னர், மாநில எம்.ஜி.ஆர். இளைஞரணி இணைச் செயலாளராகவும், அம்மா பேரவை இணைச் செயலாளராகவும் - பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றேன். மேலும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நாடாளுமன்றத் தொகுதி, சட்டமன்றத் தொகுதி மற்றும் மாவட்டக்கழகம் சார்ந்த பொறுப்புகளும் எனக்கு வழங்கப்பட்டன. அனைத்திலும் - உண்மையோடும், விசுவாசத்தோடும் பணியாற்றிய மன நிறைவு எனக்கு உண்டு.

புரட்சித்தலைவியின் மறைவுக்குப் பிறகு, தங்களது தலைமையின் கீழ் எனது அரசியல் பொறுப்புகளைத் தொடர்ந்தேன். தற்போது, கட்சியிலிருந்து விலகும் இந்த முடிவு, என் தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா, மற்றும் இந்த இயக்கத்தை தாங்கி வந்த லட்சக்கணக்கான தொண்டர்கள் மீதான எனது நன்றி எப்போதும் மாறாது. எனது பொது வாழ்வின் அடுத்த கட்டத்தில் அடியெடுத்து வைக்கும் இவ்வேளையில், இந்தப் பயணம் எனக்கு அளித்த மதிப்புகளும், பாடங்களும் வழிகாட்ட, தமிழ்நாட்டு மக்களுக்குச் சேவை செய்வதில் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் இருப்பேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்றுள்ளார்.