‘இபிஎஸ் சமுத்திரம்.. ஓபிஎஸ் கூவம்..’ விரக்தியின் உச்சத்தில் பேசுகிறார் - ஜெயக்குமார் விளாசல்

விரக்தியின் உச்சத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் பேச்சு இருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “எடப்பாடி பிட்பாக் அடிப்பது போல் கட்சியை அபகறித்துக்கொண்டார் என்று கூறியிருக்கிறார். கடந்த காலத்தில் என்னிடம் இருந்த நிதித்துறையை பறித்துக்கொண்டவர் ஓ.பன்னீர்செல்வம். சசிகலா குடும்பத்தினர் கட்சிக்குள் வரக்கூடாது என்று சொன்னரும் ஓ.பன்னீர்செல்வம் தான். 2019ல்
நாடாளுமன்ற தேர்தலுடன் 22 தொகுதிகளுக்கு ஒரு மினி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. 10 இடங்களில் வெற்றி பெற்றால் தான் அதிமுக ஆட்சியை தக்கவைக்க முடியும் என்கிற நிலையில் இருந்தது. அதில் பெரியகுளம், ஆண்டிபட்டி தொகுதிகளும் இருந்தது.
ஆனால் அந்த இரண்டு தொகுதிகளிலும் ஓபிஎஸ் அவர்களால் ஜெயிக்க முடியவில்லை. அப்போது இரண்டு தொகுதிகளும் தோற்க வேண்டும், எம்.பி- யாக போட்டியிட்ட தனது மகன் ரவீந்திரநாத் மட்டும் ஜெயிக்க வேண்டும் என ஓபிஎஸ் கோடி கணக்கான ரூபாய் செலவு செய்து ஜெயிக்க வைத்தார். அந்த தொகுதியில் கழக வேட்பாளர்கள் இருவரை தோற்கடித்து விட்டார். அதன்பிறகு 2021 பொதுத்தேர்தலில் தேனி மாவட்டத்தில் ஓபிஎஸ் மட்டுமே ஜெயிக்கிறார். வேறு யாரையும் அவர் ஜெயிக்க வைக்கவில்லை. ஓபிஎஸ்.ஐ பொறுத்தவரையில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகக் கூடாது என்பது மட்டுமே அவருடைய எண்ணம். கட்சி எக்கேடு கெட்டுப்போனாலும் பரவாயில்லை.
அதற்காகவே கழகத்திற்கு விரோதமான செயல்களை அவர் செய்து வந்தார். விரக்தியின் உச்சமாக நேற்றைய தினம் ஓபிஎஸ்-ன் பேட்டி இருந்தது. கட்சிக்கும் ஓபிஎஸ் தரப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கட்சியைப் பொருத்தவரை இன்று 1. 40 கோடி தொண்டர்கள், தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அத்தனை பேருமே எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்றுக்கொண்டு ஆதரவு கொடுக்கின்றனர். சமுத்திரம் போன்ற ஆதரவு எடப்பாடி யாருக்கு இருக்கின்ற நிலையில், கூவம் போன்று ஓபிஎஸ் இருக்கிறார். சமுத்திரம், கூவமும் ஒன்றாகி விடுமா? இவர்களெல்லாம் அரசியல் கழிசடைகள். மக்களால், தொண்டர்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் அதிமுக பெயரை உச்சரிக்கவே தகுதி இல்லாதவர்கள்.” என்று தெரிவித்தார்.