முதலமைச்சர் ஸ்டாலினை சுந்தர்.சி - வடிவேலு பட பாணியில் கிண்டல் செய்த இபிஎஸ்!
மதுரை தெற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பழங்காநத்தம் பகுதியில் எடப்பாடி பழனிசாமி பரப்புரை செய்தார். அப்போது பேசிய அவர், “நான் வரும்போது திண்டுக்கல் ஹோட்டலில் தங்கியிருந்தேன். அப்போது ஸ்டாலின் பேசியதைப் பார்த்தேன். வீர வசனம் பேசுகிறார். அதை பார்க்கும் போது, திரைப்படத்தில் வந்த ஒரு நகைச்சுவை காட்சிதான் என் நினைவுக்கு வந்தது. சுந்தர்.சி நடித்த படம் அது.
அதில் சுந்தர்.சி அவர்களும், வடிவேலுவும் பேசுவார்கள். ‘எங்க ஏரியாவுக்கு வந்து பார்’ என்பார் வடிவேலு. அவர் சொன்ன ஏரியாவுக்கு சுந்தர். சி செல்வார். இதை பார்த்ததும், ‘ஏரியாவுக்கே வந்துட்டியா… அடுத்து எங்க தெருவுக்கு வந்து பார்’ என்பார். அடுத்து தெருவுக்கு வந்து, பின்னர் வடிலுவேலு வீட்டுக்கே செல்வார் சுந்தர். சி.
அவரை பார்த்ததும் சுந்தர். சி காலில் விழும் வடிவேலு, ‘மன்னிச்சுக்ய்யா, வீரமாக பேசுனது எல்லாம் வெறும் பில்டப் யா’ என்று சொல்வார். அதுபோல தான் ஸ்டாலினும். ஸ்டாலின் அவர்கள் ஒரு டம்மி பீஸ். கருணாநிதி ஆட்சியில், இந்த மதுரை மண்ணில் உங்களால் கால் வைக்க முடிந்ததா? முடியவில்லை.
இப்படி வீர வசனம் பேசுவதை விட்டுவிடுங்கள். பழைய திமுகவை பார்ப்பீர்கள் என்கிறார், அதுதான் பார்த்துவிட்டோமே… நீங்கள் தான் மதுரைக்கே வர முடியலையே” என கடுமையான சாடினார்.
கருணாநிதி ஆட்சிக்காலத்தில் மதுரையில் கால் வைக்க முடியாதவர் மு.க.ஸ்டாலின் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
திமுக ஆட்சியிலே வரி வசூலில் முறைகேடு நடந்ததாக நாம் சொல்லவில்லை; ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. மண்டலத் தலைவர்கள் ராஜினாமா செய்தனர். மேயர் கணவர் கைது செய்யப்பட்டார். மேயரும் ராஜினாமா செய்துவிட்டார். இப்போது யாரும் இல்லாத மாநகராட்சியாக மதுரை உள்ளது. இது, எவ்வளவு பெரிய ஊழல் என்று மதுரை மக்களே எண்ணிப்பாருங்கள்.
இப்படிப்பட்ட அரசு தொடர வேண்டுமா? எவ்வளவு பெரிய அசிங்கம் இது? வரிப்பணத்தை சுரண்டும் அரசு தேவையா? மதுரை மக்கள் சிந்திக்க வேண்டும். மாநகராட்சி நிர்வாகத்தில் இப்படிப்பட்ட ஊழல் நடந்திருக்கிறது என்றால், அப்படிப்பட்ட ஆட்சி வேண்டுமா?” என தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து கேள்வியெழுப்பினார்.


