ஊட்டி, கொடைக்கானலுக்கு இ-பாஸ் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி: ஐகோர்ட்
ஊட்டி, கொடைக்கானலுக்கு இ பாஸ் பெற்ற வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
ஊட்டி மற்றும் கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்களில் எத்தனை சுற்றுலாப் பயணிகள் வந்து செல்ல முடியும் என்பது குறித்து ஆய்வு செய்ய சென்னை ஐஐடி மற்றும் பெங்களூரு ஐ ஐ எம் நிறுவனங்களை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் வருகை குறித்த புள்ளி விவரங்களை சேகரிப்பதற்காக ஊட்டி மற்றும் கொடைக்கானல் வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ_பாசை கட்டாயமாக்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் காணொளி காட்சி மூலம் ஆஜராகி இருந்தனர். அவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு குறைந்த எண்ணிக்கையில் வாகனங்கள் வந்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ள நிலையில், போக்குவரத்து ஸ்தம்பிக்கும் அளவுக்கு சுற்றுலாப் பயணிகள் இவ்விரு இடங்களுக்கும் வருகை தந்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தியை சுட்டி காட்டினார். மேலும் இரு மாவட்ட ஆட்சியர்களும் அளித்த அறிக்கையில் கூறியுள்ள புள்ளி விவரங்களை கணக்கில் எடுத்துக் கொண்டால் அது தவறான முடிவுக்கு வழி வகுத்து விடும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பதிலளித்த நீலகிரி மாவட்ட ஆட்சியர், வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளை தன்னிச்சையாக புகைப்படம் எடுக்கும் கேமராக்களை பொருத்த இருப்பதால் இனிமேல் முழுமையான புள்ளி விவரங்கள் கிடைக்கும் என்று விளக்கம் அளித்தார். இதையடுத்து, உண்மையான புள்ளி விவரங்களை சேகரிக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், இ பாஸ் இல்லாமல் எந்த வாகனமும் ஊட்டி கொடைக்கானலுக்கு செல்ல வில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் இபாஸ் பெற்ற பிறகு வாகனங்களை அனுமதிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
மேலும் இபாஸுக்கு விண்ணப்பிக்கும் போது அந்த விண்ணப்பத்தில் உரிமம் பெற்ற ரிசார்ட்கள் ஹோட்டல்கள் குறித்த விபரங்களை சேர்க்க முடியுமா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இ பாஸ் நடைமுறை சுற்றுலாப் பயணிகளை கட்டுப்படுத்துவதற்கு அல்ல என தெளிவுபடுத்திய நீதிபதிகள், வழக்கின் விசாரணையை டிசம்பர் 2 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
......