'ஆரோவில் பன்னாட்டு நகரம் அமைக்க சுற்றுச்சூழல் ஒப்புதல் அவசியம்' - தேசிய பசுமை தீர்ப்பாயம்

 
ஆரோவில்

 ஆரோவில்லில் பன்னாட்டு நகரம் அமைக்க சுற்றுச்சூழல் ஒப்புதல் பெற வேண்டியது அவசியம் என தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது.

புதுச்சேரியில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில், விழுப்புரம் மாவட்டத்தில்  அமைந்துள்ளது ஆரோவில்.  ’அரவிந்தர் ஆசிரமம்’ மூலம் ஆரோவில் சர்வதேச நகரம் உருவாக்கப்பட்டது.  இங்கு பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.   ‘கிரவுன்’ என்ற திட்டத்தின் கீழ் ஆரோவில் பகுதியில் சாலை அமைப்பதற்காக மரங்கள் வெட்டும் பணி கடந்த 4ஆம் தேதி தொடங்கியது. ஆனால் இயற்கையை அழித்து இத்திட்டத்தை துவங்க கூடாது என ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆரோவில்

பின்னர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆரோவில் வனப்பகுதியில் மரம் வெட்ட தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்தது . ஆரோவில் பகுதியில் அதிகளவில் மரங்களை வெட்டுவது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் பசுமை தீர்ப்பாயம் தெரிவித்திருந்தது.  இந்நிலையில் ஆரோவில்லில் பான்னாட்டு நகரம் அமைக்க அனுமதி பெறுவது குறித்த வழக்கு இன்று விசாரனைக்கு வந்தது,  இந்த மனுவை தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் விசாரித்து தீர்ப்பளித்தது.  

 'ஆரோவில் பன்னாட்டு நகரம் அமைக்க சுற்றுச்சூழல் ஒப்புதல் அவசியம்' - தேசிய பசுமை தீர்ப்பாயம்

அதில்,  ஆரோவில் பன்னாட்டு நகரம் அமைக்க,  சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை 2006-ன் கீழ் அனுமதி பெறுவது அவசியம் என தீர்ப்பளித்தது. ஆரோவில்லில் கட்டப்படும் அனைத்து கட்டுமானங்களுக்கும் சுற்றுச்சூழல் ஒப்புதல் பெற வேண்டியது அவசியம் என்று தெரிவித்தது.  மரங்களை வெட்டாமல், நீர்நிலைகளை பாதிக்காமல் சாலை அமைக்க முடியுமா என கூட்டுக்குழு ஆய்வு செய்ய வேண்டும் எனவும்,   சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறும்வரை எந்தக் கட்டுமானமும் மேற்கொள்ளக் கூடாது என்றும் கூறியது.
 
மரங்கள் வெட்டப்படுவதை குறைக்கும் வகையில் எப்படி சாலை அமைக்கலாம் என அறிக்கை அளிக்க வேண்டும்,  கூட்டுக்குழு அறிக்கை அளிக்கும் வரை எந்த மரங்களையும் வெட்டக்கூடாது  என்றும், வெட்டப்படும் ஒவ்வொரு மரத்துக்கும் பதிலாக 10 மரக்கன்றுகளை நட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.