பொறியியல் சேர்க்கை : இதர சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்..

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வில் பொது சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு இன்று கலந்தாய்வு தொடங்குகிறது.
தமிழ்நாடு முழுவதும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 433 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்காக 1.80 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களை தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம், இணைய வழியில் கலந்தாய்வு மூலம் நிரப்பி வருகிறது. இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வில் 1 லட்சத்து 99,868 பேர் பங்கேற்கின்றனர். அதன்படி, நடப்பாண்டுக்கான கலந்தாய்வு கடந்த 22ம் தேதி தொடங்கியது.
முதல்கட்டமாக , மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், ரசுப் பள்ளிகளில் படித்து 7.5 சதவீத ஒதுக்கீட்டில் விண்ணப்பித்தவர்களில் சிறப்பு பிரிவில் வரும் மாணவர்கள் ஆகியோருக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு நடைபெற்றது. இதில் விளையாட்டு பிரிவில் 38 இடங்கள் , முன்னாள் ராணுவத்தினர் பிரிவில் 11 இடங்கள் , மாற்றுத் திறனாளிகள் பிரிவில் 664 இடங்கள் உள்ள நிலையில் 3 பிரிவுகளுக்கும் சேர்த்து 404 பேர் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர்.
கலந்தாய்வின்போது மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 70 மாணவர்கள் கலந்துகொண்டு விருப்ப கல்லூரிகளை தேர்வு செய்தனர். அவர்களில் 48 பேருக்கு இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது. அதேபோல் விளையாட்டுவீரர்கள் பிரிவில் 262 மாணவர்கள் விருப்ப கல்லூரிகளை தேர்வு செய்த நிலையில், தகுதியான 38 பேர் தேர்வு செய்யப்பட்டு இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது. இதேபோல் முன்னால் ராணுவ வீரர்களின் வாரிசுகள் பிரிவில் 7 பேர் பங்கேற்ற நிலையில் 6 பேருக்கு இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது. மொத்தமாக இந்த சிறப்பு பிரிவில் 618 இடங்கள் இன்னமும் காலியாக உள்ளன.
இந்த நிலையில் பொது சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று ( ஜூலை 25) தொடங்குகிறது. இதில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 8,948 இடங்கள் உள்ள நிலையில், கலந்தாய்வில் பங்கேற்க 416 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். விளையாட்டு பிரிவில் 456 இடங்கள் மட்டுமே உள்ள நிலையில், 2,113 மாணவர்கள் பங்கேற்கின்றனர். முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிகள் பிரிவில் உள்ள 143 இடங்களுக்கு 1,243 மாணவர்கள் கலந்துகொள்கின்றனர்.
இன்று காலை 10 மணிக்கு தொடங்கி 28-ம் தேதி வரை இதர சிறப்புபிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும். நாளை ( வெள்ளிக்கிழமை) மாலை 5 மணி வரை தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளை மாணவர்கள் தேர்வு செய்யலாம். 27ம் தேதி தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு தற்கால ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டு, அதனை அன்றைய தினம் 7 மணிக்குள் உறுதி செய்யும் மாணவர்களுக்கு 28ம் தேதி இறுதி ஒதுக்கீடு ஆணை வழங்கப்படும்.