திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை..
![Ravinder Chandrasekar](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/96ab6f16ba313ef99c20515ecb975607.webp)
நளனும் நந்தினியும், நன்புனா என்னனு தெரியுமா, முருங்கைக்காய் போன திரைப்படங்கள் மூலம் பிரபலமாக அறியப்பட்டவர் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன். லிப்ரா புரொடக்ஷன்ஸ் லிமிடெட் என்கிற தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களை தயாரித்து வந்தார். அத்துடன் யூடியூப் சேனல் மூலம் திரைப்படங்கள் மற்றும் பிரபலங்கள் குறித்தும் விமர்சனம் செய்து வருகிறார். இதனிடையே சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்துகொண்ட போதும் ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டவர்.
இதனிடையே கடந்த ஆண்டு திடக்கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தில் முதலீடு செய்யுமாறு, மாதவ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவன உரிமையாளர் பாலாஜி என்பவரிடம் இருந்து ரூ.16 கோடி வரை மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்ட ரவீந்தர் பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் சென்னை அசோக் நகரில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரின் வீட்டில் அமலக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ரவீந்தர் வீட்டிற்கு இன்று அதிகாலை வந்த அமலாக்கத் துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றன. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.