ஜாபர் சாதிக் பினாமி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

 
ஜாபர் சாதிக்

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதான ஜாபர் சாதிக்கை ஜூலை 29-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை இந்தியாவுக்கு கடத்தி வந்ததாக மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கடந்த மார்ச் மாதம் திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஜாபர்சாதிக்கை கைது செய்து டெல்லி திஹார் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் போதை பொருட்களை விற்பனை செய்ததன் மூலம் சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாகக்கூறி ஜாபர் சாதிக் மீது வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 26-ம் தேதி கைது செய்தனர். அமலாக்கத்துறை வழக்கில் ஜாபர் சாதிக்கை ஆஜர்படுத்த சிறை மாற்று வாரண்ட் பிறப்பித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டநிலையில், அதன்படி டெல்லி திஹார் சிறையிலிருந்து கொண்டு வரப்பட்ட ஜாபர் சாதிக் நேற்று சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். 

விசாரணைக்கு பிறகு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவருடைய பினாமியான ஆவடி காமராஜ் நகரை சேர்ந்த ஜோசப் ஆயிஷா என்பவர் வீட்டில் தற்பொழுது அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஜாபர் சாதிகிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய் ஜோசப் ஆயிஷாவின் வங்கி கணக்கிற்கு வந்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து காலை ஆறு மணி முதல் தற்போது 5 மணி நேரமாக தொடர்ந்து விசாரணை என்பது நடைபெற்று வருகிறது.

இதனிடையே காவலில் இருந்தபோது தன்னை 4 பேர் அடித்து துன்புறுத்தியதாக போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் சென்னை நீதிமன்றத்தில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். சமூகத்தில் உயர் அந்தஸ்தில் உள்ள 4 பேர் பெயரை போதை பொருள் வழக்கில் கூறுமாறு வற்புறுத்தியதாகவும் ஜாபர் சாதிக் கூறியுள்ளார்.