துரைமுருகன், கதிர் ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு

 
ச்

துரைமுருகன், கதிர் ஆனந்த் வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றது.

2019- நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினராக கதிர் ஆனந்த் திமுக சார்பில் போட்டியிட்ட நிலையில், இவர்கள் சார்பாக வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்க இருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமைச்சர் துரைமுருகனின் ஆதரவாளரான பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் 11 கோடியே 52 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், நேற்று காலை முதல் காட்பாடியில் உள்ள துரைமுருகன், கதிர் ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

காட்பாடி காந்தி நகரில் உள்ள அமைச்சர் துரைமுருகன் மற்றும் கதிர் ஆனந்த் வீட்டில் யாரும் இல்லாததால் காலையில் இருந்து சுமார் 7 மணி நேரம் காத்திருந்த அதிகாரிகள், கதிர் ஆனந்திடம் இருந்து வந்த ஒப்புதல் மெயிலுக்கு பிறகு கதிர் ஆனந்தின் ஆதரவாளர்கள் மூன்று பேருடன் மதியம் 2 மணியில் இருந்து சோதனையை தொடங்கினர். இதற்கு இடையில் கதிர் ஆனந்தின் வீடு முழுவதும் சோதனை மேற்கொண்ட நிலையில் இரண்டு அறைகளுக்கான சாவி இல்லாததால் சுத்தி, உளி, கடப்பாரையை கொண்டு 2 அறையை உடைத்து சோதனை மேற்கொண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மதியம் 2 மணிக்கு தொடங்கிய சோதனை சுமார் 11 மணி நேரத்துக்கு பிறகு நள்ளிரவு 1.20 மணி அளவில் முடிவடைந்து அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர். வீட்டில் இருந்து பணம் மற்றும் ஆவணம் எதுவும் கைபற்றப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.