கடலில் வீணாக கலக்கும் மழைநீருக்கு முற்றுப்புள்ளி! இன்று முதல் தமிழகம் முழுவதும் பிரம்மாண்ட திட்டம் தொடக்கம்!

 
11

தமிழ்நாட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 10,185 வரத்துக் கால்வாய்கள், 809 ஏரிகள், குளங்கள் மற்றும் ஊரணிகள் ஆகியவற்றை, வளர்ச்சியடைந்த பாரதம், கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் புனரமைக்கும் பணி இன்று (ஆகஸ்ட் 17) முதல் தொடங்கப்பட இருப்பதாக ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

நடப்பாண்டில் எல்-நினோ காரணமாக எதிர்பார்த்த அளவில் தென்கிழக்கு பருவமழை பொழியவில்லை. அதே நேரத்தில், வடகிழக்கு பருவமழையானது சற்றே அதிகளவில் பெய்யக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, குறைவான நேரத்தில் அதிக அளவில் மழைப் பொழிவு இருக்கும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்து வருகின்றனர்.

இதுபோன்று குறைவான நேரத்தில் பெய்யக் கூடிய கனமழை நீர், பெரும்பாலும் கடலில் கலந்து வீணாகிறது. இதனைத் தடுக்கும் வகையிலும், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும் கிராம வேலை உறுதி திட்டத்தை பயன்படுத்தப்பட உள்ளது.

இதன் அடிப்படையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை சீரமைக்கும் முயற்சியில் தமிழ்நாடு அரசு தற்போது களமிறங்கியுள்ளது. நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், நீர்வரத்து மற்றும் நீர்வெளியேற்றப் பாதைகளை தூர்வாருதல் மற்றும் கரைகளை பலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு நீர்த்தேக்கத் திறனை அதிகரிப்பு செய்யப்பட உள்ளது.

அரசு மேற்கொள்ளும் இந்த நீர்நிலை பாதுகாப்பு மற்றும் சீரமைப்பு பணியில் ரோட்டரி உள்ளிட்ட தொண்டு நிறுவனங்களும் இணைந்து செயல்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது குறித்து ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக நீர்நிலைகள் மற்றும் வரத்து, பாசனக் கால்வாய்களை தூர்வாரி புனரமைப்பதன் மூலம், மழைநீரை முழுமையாக சேமித்து, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதுடன், விவசாயப் பாசன வசதிகளையும் மேம்படுத்த முடியும்.

மேலும், அதீத மழைப்பொழிவு ஏற்படும் காலங்களில் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் ஏற்படும் வெள்ளப் பாதிப்புகளையும் தடுக்க முடியும். ரூ. 500 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் இப்பணிகள், தமிழகத்தின் கிராமப்புற நீர்வளத்தைப் பாதுகாத்து மேம்படுத்தும் முக்கியமான முன்னெடுப்பாகும்.

தமிழகத்தின் கிராமப்புற நீர்நிலைகளைப் பாதுகாத்து, நீர்வளத்தை மேம்படுத்தும் இந்த பணியில், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊர் பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் பெருமளவில் கலந்துக் கொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளார்.