இத்தகைய கொடூர செயல்களை செய்பவர்களுக்கு "என்கவுண்டர் தான் ஒரே தீர்வு" - தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா ஆவேசம்!

 
premalatha vijayakanth

தே.மு.தி.க பொதுச் செயலாளரும், விருத்தாச்சலம் எம்.எல்.ஏ-வுமான பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் அடுத்தடுத்து சிறுமிகள் பாலியல் தொல்லை மற்றும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவங்கள் தமிழக மக்களை மிகுந்த அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளன. சின்னப்ப நாயக்கன்பாளையம் பகுதியில் 12 சிறுமிக்கு ஐஸ்கிரீம் வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துச் சென்று பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவமும், எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாகக் கூறப்படும் சம்பவமும் மிகக் கடுமையாகக் கண்டிக்கத்தக்கவை. 

குறிப்பாக, சிறு குழந்தைகள் மீதான இத்தகைய குற்றங்கள் சமூகத்தின் மனசாட்சியையே உலுக்கும் வகையில் உள்ளன. இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது குறித்து பொதுமக்களிடையே அச்சமும் அதிருப்தியும் அதிகரித்து வருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் இந்த அரசின் சட்டம்-ஒழுங்கு நிர்வாகத்தின் குறைபாடுகளுக்கான எடுத்துக்காட்டுகளாக பார்க்கப்படுகின்றன. குறிப்பாக, 3 வயது குழந்தை மீது நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமை சம்பவம் மனிதநேயத்திற்கும் சமூக நெறிமுறைகளுக்கும் எதிரான, ஏற்றுக்கொள்ள முடியாத கொடூரமான செயலாகும். 

தமிழக மக்கள் அனைவரும் இந்த அரசு சட்டம்-ஒழுங்கு மேம்படுத்தும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும், டாஸ்மாக் கடைகள் மூடப்படும், மதுபோதையால் ஏற்படும் சமூகப் பிரச்சினைகளை கட்டுப்படுத்தும், போன்ற வாக்குறுதிகளை நம்பி தற்போதைய அரசுக்கு வாக்களித்தனர். ஆனால், இதற்கு எந்த ஒரு தீர்வும் கிடைக்கவில்லை. பாலியல் வன்கொடுமை போன்ற கொடூர குற்றங்களுக்கு விரைவான மற்றும் கடுமையான தண்டனைகள் மட்டுமே நிரந்தரத் தீர்வை உருவாக்கும் எனக் கருதுகின்றனர். 'அரபு நாடுகளில் வழங்கப்படும் பொதுவெளி தண்டனையோ அல்லது என்கவுண்டரோதான் இதற்கான ஒரே தீர்வு' அதை இந்த அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்." என்று அதில் தெரிவித்துள்ளார்.