யானை Vs ஜெகஜால கில்லாடி: மாமல்லபுரம் விழாவில் விஜய் சொன்ன 'குட்டிக்கதை'!..!!
Updated: Mar 7, 2026, 18:13 IST1772887422022
தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கட்சித் தலைவர் விஜய் தலைமையில் மகளிர் நாள் விழா, இன்று மாலை மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் நடைபெற்றது.
விழாவில் குட்டிக் கதை சொன்ன விஜய், ஒரு ஊரில் கோயில் யானை ஒன்று இருந்தது. அது ரொம்ப உஷாரான யானையாம். ஆனால், அந்த ஊரில் இருந்த ஒரு ஜெகஜால கில்லாடி, அந்த யானையை ஏமாற்றிவிட்டார். எப்படி ஏமாற்றினார் என்றால், தேங்காயை உடைத்து அதிலிருந்து தேங்காயை எடுத்துவிட்டு, சுண்ணாம்பு வைத்து, தேங்காய் போல ஆக்கி அதனை யானையிடம் கொடுத்தார். யானையும் அதை வாங்கி சாப்பிட்டுவிட்டது. எப்படி ஏமாற்றினீர்கள் என்று அவரிடம் கேட்டதற்கு, அது தொழில் ரகசியம் ஐய்யாச்சாமி, அதற்கெல்லாம் அனுபவம் வேண்டும், உன்னால் முடியாது என்று என்று கூறினாராம் அந்த ஜெகஜால கில்லாடி.
இந்த சம்பவத்துக்குப் பிறகு மீண்டும்ஜெகஜால கில்லாடியும் அவரது நண்பரும் சந்தித்தனர். பாவம் அந்த யானை அன்று ஏமாந்துவிட்டது என்று நண்பர் சொல்ல, ஜெகஜால கில்லாடியோ, எனது திறமை மீது நம்பிக்கை இல்லையா என்று கேட்டுவிட்டு, மீண்டும் அதே யானையிடம் சென்று வாழைப்பழத்தை எடுத்துவிட்டு பஞ்சை வைத்து யானையிடம் நீட்டியிருக்கிறார்.
யானையும் அந்த பழத்தை வாங்குவது போல வந்து, ஜெகஜால கில்லாடியை தும்பிக்கையால் தூக்கிப் போட்டுவிட்டது.
அப்போது கீழே விழுந்திருந்தவரிடம் அவரது நண்பர் சொன்னாராம், அந்த யானைக்கு ஞாபக சக்தி அதிகம் என்று நினைக்கிறேன் என சொல்லியிருக்கிறார்.
இந்தக் கதையில் யானை என்பது யார் என்றால் வாக்காளர்கள். அந்த ஜெகஜாலம்ஸ் யார் என்று கேட்டால், உங்கள் மனதில் யாரையாவது நினைத்தால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல என்று கூறி கதையை நிறைவு செய்த விஜய், இங்கே இருப்பது ஒற்றை யானையல்ல, இரட்டை யானைகள், என் சிங்கப் பெண்கள், உங்களை யாரும் ஏமாற்ற முடியாது என்று கூறினார்.

