வெள்ளியங்கிரி கோயிலில் கடைகளை சேதப்படுத்தி யானை அட்டகாசம்
கோவை வெள்ளிங்கிரி மலை அடிவார கோயிலுக்கு வந்த ஒற்றை காட்டு யானை அங்கிருந்த கடைகளையும், இரும்பு தடுப்பையும் நள்ளிரவு சேதப்படுத்தியது.

கோவை மாவட்டம் பூண்டி வெள்ளியங்கிரி மலை மீதுள்ள சுயம்பு லிங்கத்தை தரிசிக்க, ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் மே மாதம் வரை அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அதிகளவிலான பக்தர்கள் நாள்தோறும் மலையேற்றம் செய்து வருகின்றனர். இதனிடையே வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் உள்ள அன்னதான கூடத்திற்கு காட்டு யானைகள் உணவு தேடி அடிக்கடி வந்து செல்கின்றன.
குறிப்பாக ஒற்றை ஆண் காட்டு யானை அடிக்கடி உணவு மற்றும் தண்ணீர் தேடி அப்பகுதிக்கு வந்து செல்கிறது.
இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை நள்ளிரவு வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் வளாகத்தில் கடைகள் அமைக்கப்பட்டு இருந்த பகுதிக்குள், வனப்பகுதியில் இருந்து வந்த ஒற்றை ஆண் காட்டு யானை புகுந்தது. படிக்கட்டு வழியாக இறங்கி சென்ற அந்த யானை, இரும்பு தடுப்பினை தள்ளி விட்டு உள்ளே நுழைந்து அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தியது. வெள்ளியங்கிரி மலையேறுவதற்காக அதிகளவிலான பக்தர்கள் வந்திருந்த போது, காட்டு யானை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் காட்டு யானை வருவதை பார்த்த பக்தர்கள் பதறியடித்து ஓட்டம் பிடித்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் போராடி அந்த காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். வெள்ளியங்கிரி மலையேற அதிகளவிலான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில், அடிக்கடி காட்டு யானை வந்து செல்வது பக்தர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் உணவு தேடி அடிக்கடி காட்டு யானை வெள்ளியங்கிரி மலையடிவார பகுதிக்கு வந்து செல்லும் நிலையில், வெள்ளியங்கிரி கோயில் நிர்வாகம் மற்றும் அடிவாரத்தில் கடை அமைத்துள்ளவர்களுக்கு போளுவாம்பட்டி வனத்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதில், பழக்கடைகளில் தர்பூசணி, மாங்காய் போன்ற யானைகளை கவரும் பழங்களை விற்பனை வைத்திருப்பதாலும், கோயில் அன்னதான கூடத்தில் மீதமாகும் உணவு கழிவுகளை அங்கேயே கொட்டுவதாலும் உணவு தேடி காட்டு யானை அடிக்கடி அப்பகுதிக்கு வரக்காரணமாக இருப்பதாகவும், இதனை தவிர்க்க வேண்டும் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் காட்டு யானை நடமாட்டம் அதிகரித்து இருப்பதால், பக்தர்கள் கவனத்துடன் வெள்ளியங்கிரி மலையேற வருமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.


