மின் கம்பத்தில் இருந்து விழுந்து மின் ஊழியர் பலி! குமரியில் சோகம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மின் கம்பத்தில் இருந்து விழுந்து மின் ஊழியர் அஸ்வின் குமார் (34 ) என்பவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அடுத்த எட்டாமடை பகுதியை சேர்ந்தவர் அஸ்வின் குமார் (34 ). மின் வாரிய ஊழியர். இவர் இன்று மதியம் 1 மணியளவில் நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் குமரி காலனி பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மின் பழுதை சரி செய்வதற்காக வந்தார். அந்த பகுதியில் மின் இணைப்பை துண்டித்து விட்டு மின் கம்பத்தில் ஏறி பழுதை சரி செய்து கொண்டு இருக்கும் போது திடீரென அஸ்வின் குமார் கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் வடசேரி ஆய்வாளர் ஜெயலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மின் பழுதை சரி செய்வதற்கு முன் அந்தப் பகுதியில் மின் இணைப்பை துண்டித்து விட்டு அதன் பின் தான் அஸ்வின் குமார் மின் கம்பத்தில் ஏறி இருக்கிறார். எனவே அஸ்வின் குமார் மின்சாரம் தாக்கி இறந்தாரா? அல்லது கால் தவறி விழுந்து இறந்தாரா? என்பது தெரியவில்லை. இது குறித்து வடசேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரேத பரிசோதனைக்கு பிறகு அஸ்வின் குமார் எப்படி இறந்தார் என்பது தெரிய வரும் என போலீசார் கூறினர்.