ஜூலை 1ம் தேதி முதல் மின் கட்டண உயர்வு?
வருகின்ற ஜூலை மாதம் முதல் தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு இருக்கக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த முக்கிய ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றுள்ளது. மின்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், மின்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் இந்த அவசர ஆலோசனையை மேற்கொண்டார்.
இந்தக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் தற்போதைய மின் தேவை மற்றும் மின் உற்பத்தித் திறன் குறித்து மிக விரிவாக விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, தற்போது நிலவி வரும் கேஸ் தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள சவால்கள் குறித்தும், வரவிருக்கும் மாதங்களில் அதிகரிக்க வாய்ப்புள்ள மின்தேவையை தடையின்றி எப்படிச் சமாளிப்பது என்பது குறித்தும் அதிகாரிகள் தரப்பில் முதலமைச்சரிடம் விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், தவெக அரசு தேர்தல் வாக்குறுதியாக அளித்திருந்த 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் குறித்தும், அதைச் செயல்படுத்துவதில் உள்ள நடைமுறைச் சாத்தியக்கூறுகள் மற்றும் நிதிநிலைகள் குறித்தும் இந்த ஆலோசனையில் முக்கியமாக விவாதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மின் கட்டண உயர்வு மற்றும் இலவச மின்சார அறிவிப்பு என இரண்டுமே மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

