சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின்தேவை : அமைச்சர் செந்தில் பாலாஜி..

 
மின்சாரம்

சென்னையில் நேற்று மின் தேவை 4,044 மெகாவாட் என்னும்  புதிய உச்சத்தை  தொட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.  

கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்   இரவு நேரங்களில் அவ்வப்போது  மின்தடை ஏற்பட்டு வருகிறது. அதேநேரம் வெயிலும் கடுமையாக கொளுத்தி வருவதால், இரவு நேரங்களில் புழுக்கம் தாங்காமல்  மக்கள்  தூக்கமின்றி அவதிக்கு ஆளாகின்றனர்.  இந்நிலையில், சென்னையில் சீரான மின் விநியோகத்தை மேற்கொள்வது குறித்து, மின்வாரிய அதிகாரிகளுடன் அத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி  ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, “ சென்னையில் ஒருநாள் மின்நுகர்வு 423 மில்லியன் யூனிட் அளவுக்கு அதிகரித்துள்ளதாகவும், மின்தேவை அதிகரித்துள்ள போதிலும் எவ்வித பாதிப்பும் இன்றி சீரான மின்விநியோகம் செய்யப்பட்டு வரப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.  

செந்தில் பாலாஜி
 
இந்நிலையில் சென்னையில் நேற்று மின் தேவை புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து  தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,  “கடந்த 5 ஆண்டு கால அதிமுக ஆட்சியில், சென்னையின் அதிகபட்ச மின் தேவை 18/06/2019 அன்று 3738 MW மட்டுமே. சென்னையின் நேற்றைய 17/05/2023 மின் தேவை 4044 மெகாவாட் ஆகும். இந்த தேவை எந்த மின் தடையுமின்றி ஈடு செய்யப்பட்டது. இதற்கு முந்தைய உட்சபட்ச தேவை 16/05/2023ல் 4016 MW ஆகும். நேற்று சென்னையில் மின் நுகர்வு 9.03 கோடி யூனிட்கள் பயன்படுத்தப்பட்டது. இதற்கு முன் 16/05/2023 அன்று 9.02 கோடி யூனிட்கள் பயன்படுத்தப்பட்டிருந்தது.அதுவே அதிமுக ஆட்சியில், உட்சபட்சமாக வெறும் 6.64 கோடி யூனிட்களே 17/06/2019 அன்று பயன்படுத்தப்பட்டிருந்தது.” என்று தெரிவித்தார்.