ஸ்மார்ட் மீட்டர் - அதானிக்கான டெண்டர் ரத்து! மின்சார வாரியம் அதிரடி
தமிழகத்தில் மின் இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் சர்வதேச டெண்டரை ரத்து செய்து தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.
வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களின் மின்சாரப் பயன்பாட்டைத் துல்லியமாகக் கணக்கிடும் வகையிலும், மின்சார வாரியங்களின் தொழில்நுட்ப மற்றும் வணிக இழப்புகளைக் குறைக்கும் வகையிலும் அனைத்து மின் இணைப்புகளுக்கும் ஸ்மார்ட் மீட்டர்களைப் பொருத்துவதை கட்டாயமாக்கும் திட்டத்தை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் கணிசமான எண்ணிக்கையிலான மின் இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட வேண்டும்.
இதற்கான ஒரு மீட்டருக்கு சராசரியாக 900 ரூபாயை மானியமாக ஒன்றிய அரசு வழங்க உள்ளது. இதன்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 3 கோடி இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்படவுள்ளன. தமிழகத்தின் மாவட்டங்கள் மொத்தம் 4 தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக கடந்த ஆண்டு ஆகஸ்டில் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டன. அவற்றில் முதல் தொகுப்புக்கான ஒப்பந்தத்தில் அதானி குழுமத்தைச் சேர்ந்த அதானி எனர்ஜி சொலுசன்ஸ் லிமிடெட் (Adani Energy Solutions Limited) குறைந்த விலையை குறிப்பிட்டு இருந்தது.
இந்நிலையில், இந்த சர்வதேச டெண்டரை ரத்து செய்தது தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. குறைவான தொகையை அதானி நிறுவனம் குறிப்பிட்டு இருந்தாலும் அந்த தொகை மின்சார வாரிய பட்ஜெட்டுக்கு அதிகமாக இருப்பதால் டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது தகவல் வெளியாகி உள்ளது. இந்த முதல் தொகுப்பில் 8 மாவட்டங்களில் 82 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்வதற்கான டெண்டர் குறிப்பிடத்தக்கது.