அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு சிகிச்சை அளித்த எலக்ட்ரீசியன்..!
சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதுாரில் அரசு மருத்துவமனை உள்ளது. கடந்த 18ம் தேதி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து காயமடைந்த திலகர் என்பவர், ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார்.
அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, மருத்துவமனையின் எலக்ட்ரீஷியன் விக்னேஷ் என்பவர் சிகிச்சை அளித்துள்ளார். இது, நோயாளிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
இது குறித்து ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் ஜெயபாரதி கூறியதாவது: மருத்துவமனையில் எலக்ட்ரீஷியனாக பணிபுரியும் விக்னேஷ், கடந்த 17ம் தேதி மருத்துவமனையில் இருந்தபோது, அவரின் நண்பரான திலகர், வாகன விபத்தில் சிக்கி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளார். அப்போது, மருத்துவமனையில் பணியில் இருந்த மருந்துவர்கள், வேறு நோயாளிக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தனர். காயமடைந்து வந்த நண்பருக்கு, தானே முன்வந்து விக்னேஷ் சிகிச்சை அளித்துள்ளார். இதையடுத்து, நேற்று முன்தினம் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
மேலும், அவசர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்த மருத்துவர்களிடம், இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல, கடந்தாண்டு அவசர கிசிச்சை பிரிவில் மருத்துவ உதவியாளர் இளையராஜா, அங்கு அமர்ந்து மது அருந்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

