திருப்பூரில் தேர்தல் 'கெடுபிடி'! வேட்பாளருடன் 5 பேர் மட்டுமே அனுமதி..!

 
1

திருப்பூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வேட்புமனுத் தாக்கல் பணிகளில் ஈடுபடவுள்ள அரசு அலுவலர்களுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்பு திருப்பூர் வடக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவப்பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. இந்த வகுப்பில், வேட்புமனுக்களைப் பெறுவதில் உள்ள நுணுக்கங்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது. குறிப்பாக, படிவம் 2ஏ மற்றும் 2பி-யை சரியாகப் பூர்த்தி செய்தல், 20 ரூபாய் முத்திரைத்தாளில் சொத்து மற்றும் குற்றப் பின்னணி விவரங்களைச் சமர்ப்பித்தல், மற்றும் பொதுப் பிரிவினருக்கு 10 ஆயிரம் ரூபாயும், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆயிரம் ரூபாயும் வைப்புத் தொகையாகப் பெறுவது போன்ற நடைமுறைகள் குறித்து 26 அரசு அலுவலர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.

வேட்புமனுத் தாக்கலின் போது கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வேட்பாளர் வரும் வாகனங்களின் எண்ணிக்கை மூன்றாகக் குறைக்கப்பட வேண்டும் என்றும், தேர்தல் நடத்தும் அலுவலரின் அறைக்குள் வேட்பாளருடன் சேர்த்து மொத்தம் ஐந்து பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுக்களைப் பெறும்போது தேதி மற்றும் நேரத்தைக் குறிப்பிட்டு ஒப்புகைச் சீட்டு வழங்க வேண்டியதன் அவசியத்தையும், வேட்புமனு பரிசீலனையின் போது வேட்பாளர் அல்லது அவரது முகவர் மட்டுமே இருக்க வேண்டும் என்பதையும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். 25 வயது பூர்த்தியாகாதது அல்லது முன்மொழிபவர் கையெழுத்திடாதது போன்ற காரணங்களால் மனுக்கள் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் ஏப்ரல் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மார்ச் 30-ஆம் தேதி முதல் ஏப்ரல் 6-ஆம் தேதி வரை வேட்புமனுத் தாக்கல் செய்யக் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த எட்டு நாட்களில் மகாவீரர் ஜெயந்தி, வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு, புனித வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என மொத்தம் நான்கு நாட்கள் அரசு விடுமுறை வருகின்றன. இதனால், மார்ச் 30 மற்றும் ஏப்ரல் 2, 4, 6 ஆகிய நான்கு நாட்கள் மட்டுமே வேட்பாளர்கள் மனுத் தாக்கல் செய்ய முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது. மிகக் குறைந்த நாட்களே உள்ளதால், வேட்பாளர்கள் தங்கள் ஆவணங்களைத் தயார் நிலையில் வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.