தேர்தல் விடுமுறை எதிரொலி: தமிழகத்தில் ஒரே நாளில் ரூ. 350 கோடிக்கு மது விற்பனை..!
தமிழக அரசின், 'டாஸ்மாக்' கடைகளில் தினமும் சராசரியாக, 150 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபான வகைகள் விற்பனையாகின்றன; இது, வார விடுமுறை மற்றும் விசேஷ விடுமுறை நாட்களில் அதிகரிக்கிறது.
திருவள்ளுவர் தினம், குடியரசு தினம் உட்பட, ஆண்டுக்கு எட்டு நாட்கள் மட்டுமே மது கடைகளுக்கு விடுமுறை. விடுமுறைக்கு முந்தைய நாளில் மது கடைகளில், மது பிரியர்கள் அதிகளவில் மது வகைகளை வாங்குவர். சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு நாளை நடக்கிறது. இதனால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதை தடுக்கவும், வாக்காளர்களுக்கு மது வினியோகத்தை தடுக்கவும், நேற்று முதல் நாளை வரை மது கடைகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதையடுத்து, நேற்று முன்தினம் மது பிரியர்கள், கடை மூடும் வரை மது வகைகளை வாங்கி குவித்தனர். இதனால், அன்று ஒரே நாளில் மட்டும், 350 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபான வகைகள் விற்பனையாகியுள்ளன.

