வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்புவதை நிறுத்துக – மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு..!

 
Q
இந்தியாவின் வளர்ச்சிக்கு மக்களிடம் கருத்துக்களை பெறுவதற்காக விக்ஷித் பாரத் சம்பார்க் என்ற வாட்ஸ்அப் மூலமாக வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு அரசு சார்பாக செய்தி அனுப்பப்பட்டது. அதனுடன் பிரதமர் மோடி எழுதிய கடிதம் ஒன்று இணைக்கப்பட்டது. இதில் பிரதமர் மோடி, அரசின் செயல்பாடுகள் பற்றி எழுதியிருந்தார்.
இது மக்களிடம் கருத்து கேட்பது போல் இல்லை, பாஜக தேர்தல் பிரச்சாரத்தை இதன் மூலம் மேற்கொள்வதாக எதிர்ப்பு எழுந்தது. மேலும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் ஆன பின்னர் மெசேஜ் அனுப்பப்படுவதாகவும் இது தேர்தல் நடத்தை விதிமுறையை மீறுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்பி சகேட் கோக்லே மார்ச் 18ம் தேதி, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில் அமைச்சகம் பதிவு செய்த விக்ஷித் பாரத் சம்பார்க் என்ற வாட்ஸ்அப் கணக்கில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலான பின்னர் மெசேஜ்கள் வருவதாவும், வெளிநாட்டில் உள்ளவர்களுக்கும் மெசேஜ் அனுப்படுவதால் அரசின் எந்த தகவல் அமைப்பு பயன்படுத்தப்படுகிறது என்றும் கேள்வி எழுப்பி இருந்தார்.
இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு அமைச்சகம் அளித்த தகவலில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மார்ச் 16ம் தேதிக்கு முன்னர் 15ம் தேதியிலேயே வாட்ஸ்அப் மெசேஜ்கள் அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
தேர்தல் ஆணையம் அமைச்சகத்துக்கு பிறப்பித்துள்ள உத்தரவில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும் முன்பு அனுப்பப்பட்டாலும், நெட்வொர்க் மற்றும் கணிப்பொறி அமைப்பின் காரணமாக தாமதமாக வாட்ஸ்அப் மெசேஜ்கள் மக்களுக்கு டெலிவரி ஆவதாக கூறியுள்ளது. மேலும், தற்போதும் விக்ஷித் பாரத் மேசேஜ்கள் வந்து கொண்டிருப்பதாக பல தரப்பில் இருந்தும் புகார்கள் வருவதை தேர்தல் ஆணையம் குறிப்பிட்டு உள்ளது.
இதனால், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் வரை வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பத் தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.