அதிமுகவின் 40 நட்சத்திரப் பேச்சாளர்களுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி..!
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளில் அக்., 6ஆம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலை முன்னிட்டு, அதிமுகவின் 40 நட்சத்திரப் பேச்சாளர்களுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்ய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும், வேலுமணி-சி.வி.சண்முகம் தரப்புக்கும் இடையே நிலவும் உட்கட்சி கருத்து வேறுபாடுகளால் இவர்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இந்த பட்டியலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, துணைப் பொதுச் செயலாளர் கே.பி முனுசாமி, கொள்கை பரப்புச் செயலாளர் தம்பிதுரை, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், கட்சியின் தேர்தல் குழு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளின் பெயர் இடம் பெற்றுள்ளது.
ஆனால் அதிமுக மூத்த நிர்வாகிகளும், முன்னாள் அமைச்சர்களுமான சி.வி சண்முகம், எஸ்.பி.வேலுமணி ஆகியோரின் பெயர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சிவி சண்முகம், எஸ்.பி. வேலுமணி ஆகியோர் தலைமையில் தனி அணி உருவானது.
பின்னர், எடப்பாடி பழனிசாமியுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி எஸ்.பி. வேலுமணி அவருடன் ஐக்கியமானார். ஆனால், சி.வி.சண்முகம் எடப்பாடி பழனிசாமியை இதுவரை சந்திக்கவில்லை.
இந்த சூழலில்தான், அதிமுக நட்சத்திர வேட்பாளர்கள் பட்டியலில் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி ஆகியோரின் பெயர்கள் இடம்பெறவில்லை.
மதுராந்தகம் தொகுதியை பொறுத்தவரை வன்னியர் சமூகத்தினர் அடர்த்தியாக வசித்து வரும் தொகுதி ஆகும். எனவே, வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த சி.வி. சண்முகத்தின் தேர்தல் பிரச்சாரம் கட்சிக்கு கூடுதல் பலமாக இருக்கும் என கருதப்பட்டது.
அதே போல், தாராபுரம் தொகுதியில் கொங்கு சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக இருப்பதால், எஸ்.பி. வேலுமணியின் பிரச்சாரம் முக்கியமானதாக பார்க்கப்பட்டது.
இந்நிலையில், இருவரின் பெயரும் நட்சத்திர பேச்சாளர் பட்டியல் இடம்பெறாதது அதிமுகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதேபோல், கொங்கு பகுதியை சார்ந்த முன்னாள் அமைச்சர் தங்கமணியின் பெயரும் இந்த பட்டியலில் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.

