திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி..!

 
MK stalin

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்புமனுவில் அறக்கட்டளை சொத்துகளை மறைத்துள்ளதாக கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட வழக்கறிஞரும், தேசிய மக்கள் கட்சியின் வேட்பாளருமான சிவஞானசம்பந்தம் உயர்நீதிமன்றத்தில் புகார் அளித்தார்.

அதில் திமுக தலைவர் ஸ்டாலின், திமுக அறக்கட்டளையின் நிர்வாகியாக இருப்பதையும், அறக்கட்டளைக்கு சொந்தமாக செங்கல்பட்டு அருகே 2 கோடியே 27 லட்சம் ரூபாய் நிலம் வாங்கியதை மறைத்துள்ளார். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ தர்மாதிகாரி, நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வேட்புமனுவில் அறக்கட்டளை சொத்து விவரங்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மறைத்தது குற்றம் என்றும், இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர்தல் வெற்றியை எதிர்த்து மட்டுமே தேர்தல் வழக்கு தொடர முடியும். ஆவணங்களை மறைத்தது தொடர்பாக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 'தனி நபர் வழக்கு' தான் தாக்கல் தொடர முடியும் என தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'வேட்பு மனுவில் தனிப்பட்ட சொத்து விவரங்கள் மட்டுமே தெரிவிக்க வேண்டும். அறக்கட்டளை சொத்துகள் தனிப்பட்ட சொத்துகள் ஆகாது. தனிப்பட்ட முறையில் இந்த சொத்துகளில் சம்பந்தம் இருக்கிறது என்பதை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என்பதால் நோட்டீஸ் பிறப்பிக்க முடியாது' என திட்டவட்டமாக மறுத்தனர்.

இதையடுத்து வழக்கை திரும்ப பெறுவதாக மனுதாரரான சிவஞானசம்பந்தம் கூறியதை ஏற்று, வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.