வால்பாறை அருகே புலி தாக்கி மூதாட்டி மரணம்

 
death

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் உட்பட்ட மானாம்பள்ளி வனச்சரகத்தில் அமைந்துள்ள சோலையார் டேம் பகுதியில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சோலையார் நகரில் வசித்து வந்த திருமதி இன்னாசியம்மாள் (75), க/பெ அந்தோணிசாமி, வயது மூப்பு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் தனியாக வசித்து வந்தார். மிகவும் மெதுவாகவும், கூன் விழுந்த நிலையிலும் நடப்பதற்கே சிரமப்பட்டு வந்த இவர், நேற்று (ஏப்.18) வீட்டில் இருந்து காணாமல் போனதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். பிற்பகலில் உறவினர்கள் உணவு வழங்கிவிட்டு சென்ற நிலையில், மாலை திரும்பியபோது அவர் இல்லாதது தெரியவந்தது. இதையடுத்து உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் இரவு வரை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், இன்று (ஏப்.19) அதிகாலை வனத்துறையினர் மற்றும் மனித–வன விலங்கு மோதல் தடுப்பு குழுவினர் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். காலை சுமார் 6.45 மணியளவில், அவரது வீட்டிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள பள்ளமான மித வனப்பகுதியில், சிற்றோடை அருகே இன்னாசியம்மாள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். மூதாட்டியின் உடல் அடையாளம் தெரியாத ஊன் உண்ணி வன விலங்கினால் பகுதி உண்ணப்பட்ட நிலையில் இருந்தது அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சம்பவ இடத்தை சுற்றி வனத்துறையினர் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டபோதும், உடலை இழுத்துச் சென்ற தடயங்களோ அல்லது வேட்டையாடிய தெளிவான அடையாளங்களோ எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை.ஆனால், அப்பகுதி வனப்பகுதி சூழல் மற்றும் சம்பவத்தின் தன்மை காரணமாக, இது புலி தாக்கமாக இருக்கக்கூடும் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இருப்பினும், இதற்கான உறுதியான ஆதாரம் எதுவும் இதுவரை இல்லை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். எந்த வகை வன விலங்கு தொடர்புடையது என்பதை கண்டறிய தொடர்ந்து தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

இதனைத் தொடர்ந்து, அப்பகுதி மக்களுக்கு வனத்துறையினர் முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் தனியாக வெளியே வராமல் இருக்கவும், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.