அவிநாசி அருகே வயதான தம்பதி வெட்டிக் கொலை!

 
ச்

அவிநாசி அருகே முன்பகை காரணமாக  வயதான தம்பதியினரை  உறவினரே வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்து ஊஞ்சப்பாளையம் கிராமத்தில் தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார் பழனிச்சாமி(95). இவர் தனது இரண்டாவது மனைவி பருவதம் (75) உடன் வசித்து வருகிறார். பழனிச்சாமிக்கு ஒரு மகன் மற்றும் இரு மகள்கள் உள்ளனர்.  அவர்கள் திருமணமாகி வெளியூரில் உள்ளனர். இதனால், முதியவர்கள் இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் தோட்டத்து வீட்டில் பழனிச்சாமி மற்றும் பர்வதம் தம்பதியர் வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் படுகொலை செய்யப்பட்டு கிடப்பதாக அவிநாசி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், பழனிச்சாமியின் வீட்டிற்கு பக்கத்து தோட்டத்தில் வசித்துவரும் உறவினரான ரமேஷ் (43) -ற்கும் பழனிச்சாமி குடும்பத்திற்கும் இடையே ஆடு மற்றும் கோழிகள் வேலி தாண்டி வருவது குறித்து பல மாதங்களாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால், அடிக்கடி சண்டையும் நடந்து வந்துள்ளது. இதே போல நேற்றும் சண்டை நடந்துள்ளது.  
    
இதையடுத்து ஆத்திரமடைந்த ரமேஷ், வீடு புகுந்து பருவதத்தை அறிவாலால் கழுத்தில் வெட்டியுள்ளார். அடுத்து பழனிச்சாமியையும் கழுத்து மற்றும் காது அருகே வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்து இருவரும் உயிரிழந்துள்ளனர். வெட்டிக் கொன்ற ரமேஷ் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். ரமேஷ் ஓடுவதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவிநாசி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தற்போது ரமேஷை கைது செய்து சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் படுகொலை சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்புள்ளதா, கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பது குறித்தும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர். மேலும், கைரேகை மற்றும் தடையவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து வருகின்றனர்.  மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு விசாரித்து வருகின்றனர்.