திமுகவின் சதி வலையில் யாரும் விழ வேண்டாம்- எடப்பாடி பழனிசாமி

 
eps eps

பொம்மை முதல்வரும், அவர் தலைமையிலான திமுக-வும் பல்வேறு கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டு, தங்கள் வாக்கு பறிபோனது போல சித்தரிக்கப் பார்ப்பார்கள். அவர்களின் சதிவலையில் யாரும் விழவேண்டாம். ஒரு உண்மையான வாக்கு கூட இல்லாமல் போகும் நிலை, அதிமுக இருக்கும் வரை உருவாகாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

EPS

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில், “அன்பிற்கினிய தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு வணக்கம். தமிழ்நாட்டில் SIR கணக்கீட்டுப் பணிகள் முடிவுற்று, தற்போது வரைவு வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இதில், 90 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. இவற்றில் பெரும்பாலான போலி வாக்குகள் நீக்கப்பட்டுள்ளது, அஇஅதிமுக ஆரம்பம் முதலே எதற்கு இந்த SIR தேவை என்று கூறிய காரணத்தை மெய்ப்பிக்கும் வகையில் உள்ளது. எந்த போலி வாக்குகளை வைத்து, மக்களாட்சி விழுமியங்களை வளைத்து ஆட்சியைப் பிடிக்க திமுக நினைத்ததோ, அந்த கனவு மண்ணோடு மண்ணாக போன ஆத்திரத்தில், பதற்றத்தில் பல்வேறு புலம்பல் நாடகங்களை அரங்கேற்றத் தயாராகி வருகிறது.

அன்பார்ந்த வாக்காளர்களே- வரைவு வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர் விடுபட்டு இருந்தால், பதட்டப்பட வேண்டாம். புதிய வாக்காளராக தங்களை இணைத்துக் கொள்ள தேர்தல் ஆணையத்தின் படிவம்-6, அல்லது தாங்கள் இடம் மாறி இருந்து அதனால் வாக்கு நீக்கப்பட்டிருப்பின் படிவம்- 8 நிரப்பி, தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள அடையாள அட்டைகளுள் ஒன்றோடு சமர்ப்பித்தால், தங்களின் பெயர் நிச்சயமாக இணைக்கப்படும். இதற்கு உங்களுக்கு நம் அதிமுக BLA-2 பாக முகவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பொம்மை முதல்வரும், அவர் தலைமையிலான திமுக-வும் பல்வேறு கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டு, தங்கள் வாக்கு பறிபோனது போல சித்தரிக்கப் பார்ப்பார்கள். அவர்களின் சதிவலையில் யாரும் விழவேண்டாம். ஒரு உண்மையான வாக்கு கூட இல்லாமல் போகும் நிலை, அதிமுக இருக்கும் வரை உருவாகாது. என் உயிருக்கு உயிரான நம் கழக உடன்பிறப்புகளே- SIR கணக்கீட்டுப் பணிகளில் மிகுந்த கவனத்தோடு செயல்பட்ட உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளும், பாராட்டுகளும். ஆனால், இப்போது தான் நமக்கு மிக முக்கியமான வேலை இருக்கிறது.


ஒவ்வொரு பூத் வாரியாக பழைய வாக்காளர் பட்டியலோடு, வரைவு வாக்காளர் பட்டியலை ஒப்பிட்டு, வரைவு பட்டியலில் உள்ள வாக்காளர்கள் சரியான காரணத்திற்காக (இறப்பு, இடமாற்றம், இரட்டை வாக்கு) நீக்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். சரியான காரணம் இன்றி வாக்காளர் நீக்கப்பட்டு இருந்தால், அவர்களின் இல்லத்திற்கே சென்று, அவர்களுக்கு படிவம்-6 / படிவம்-8 நிரப்பி, BLO-விடம் வழங்கி அவர்களின் வாக்குகள் இறுதிப் பட்டியலில் சேர்க்கப்படுவதை உறுதி செய்ய வேண்டியது நம்முடைய தலையாயக் கடமை. அதேபோல், போலி வாக்குகள் நீக்கப்படாமல் இருந்தால், அதனை தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் முறையிட்டு, அவை நீக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். இப்பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள மாவட்டக் கழகச் செயலாளர்களை அறிவுறுத்துகிறேன். மாவட்டக் கழகச் செயலாளர்கள் வழிகாட்டுதலோடு, SIR பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள மாவட்டப் பொறுப்பாளர்கள் இப்பணிகளை ஒருங்கிணைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஜனநாயகத்தின் ஆகச்சிறந்த உரிமையான நம் வாக்குகள் உண்மையானதாக இருப்பதை உறுதி செய்ய நடைபெறும் இந்த சிறப்பு வாக்காளர் திருத்தத்தின் இறுதி வாக்காளர் பட்டியல், தமிழ்நாட்டின் உண்மையான வாக்காளர்கள் மட்டுமே இருக்கின்ற, 2026 சட்டமன்றத் தேர்தலில் உண்மையான மக்களாட்சிக்கு அடித்தளமிடும் பட்டியலாக அமைத்திடும் வகையில் பணியாற்றிடுவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.