இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்க உடனே நடவடிக்கை எடுங்கள்- ஈபிஎஸ்

 
eps eps

தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும்போது இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர்கதையாக உள்ளது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

eps

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில், “மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பது போல், நமது அண்டை நாடான இலங்கையில் புதிய ஓர் ஆட்சி அமைந்த பிறகும், தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும்போது இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர்கதையாக உள்ளது. தங்களின் வாழ்வாதாரத்திற்காக உயிரையும் பணயம் வைத்து மீன்பிடிக்கும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 31 பேரையும், அவர்களது 3 விசைப்படகுகளையும் நேற்று (3.11.2025) இலங்கை கடற்படையினர் தாக்கி கைது செய்துள்ளனர். இலங்கை கடற்படையினரின் இத்தகைய அத்துமீறிய செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையிலுள்ள அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு, இலங்கை அரசோடு தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள அனைத்து தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கும் தேவையான உதவிகளையும் வழங்க வேண்டுமென்று விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.