போதைப்பொருள் புழக்கத்திற்கு பொறுப்பேற்று ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்- ஈபிஎஸ்

 
eps

விடியா திமுக ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் கட்டுக்கடங்காமல் இருக்கும் நிலையில், சிறையிலிருந்து ஒரு கைதி போதைப்பொருள் கடத்தலில் ஈடுப்பட்டிருப்பது சட்டம் ஒழுங்கு சீர்கேட்டின் புதிய உச்சம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.

EPS

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “சென்னை புழல் சிறையில் இருந்தபடியே காசிலிங்கம் என்ற கைதி, தன் மனைவியை வீடியோ கால் மூலம் தொடர்புகொண்டு, சென்னையில் இருந்து இலங்கைக்கு 1.47கிலோ மெத்தப்பட்டமைன் போதைப்பொருள் கடத்தியுள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. விடியா திமுக ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் கட்டுக்கடங்காமல் இருக்கும் நிலையில், சிறையிலிருந்து ஒரு கைதி போதைப்பொருள் கடத்தலில் ஈடுப்பட்டிருப்பது சட்டம் ஒழுங்கு சீர்கேட்டின் புதிய உச்சம்.

ஏற்கனவே திமுக அயலக அணியைச் சேர்ந்த ஜாபர் சாதிக் சர்வதேச போதைப்பொருள் மாபியா நடத்திவந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு போதைப்பொருள் மாபியா அம்பலப்பட்டிருப்பது, இந்த விடியா திமுக ஆட்சியில் தமிழ்நாடு போதைப்பொருள் கடத்தலின் முக்கிய மையமாக மாறியிருப்பதையே காட்டுகிறது.

eps

போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காத திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது கடும் கண்டனம். தமிழ்நாட்டில் இயங்கும் போதைப்பொருள் கடத்தல் அமைப்புகளை முற்றுமாக ஒழிக்க வேண்டும். இல்லையேல், போதைப்பொருள் புழக்கத்திற்கு பொறுப்பேற்று விடியா திமுக முதல்வர் ராஜினாமா செய்யவேண்டும். #Resign_Stalin.... கடைசி துளி போதைப்பொருள் ஒழியும் வரை அதிமுகவின் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.