அதிமுக எம்எல்ஏக்களுடன் இபிஎஸ் ஆலோசனை
அதிமுக எம்எல்ஏக்களுடன் பொதுச்செயலாளர் எடப்பாடி ஆலோசனை மேற்கொண்டுவருகிறார்.
பரபரப்பான சூழலில் சென்னையில் அதிமுக எம்எல்ஏக்களுடன் பொதுச்செயலாளர் எடப்பாடி ஆலோசனை மேற்கொண்டுவருகிறார். ஈபிஎஸ் உள்ளிட்ட வெற்றி பெற்ற 47 எம்.எல்.ஏக்களும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். அதிமுக சட்டமன்ற குழு தலைவர் பதவி உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அதிமுகவின் மூவர் குழு ஆலோசனை தீவிரமாக நடைபெற்றுவருகிறது. அதிமுகவின் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்தும், தவெகவிற்கு ஆதரவளிக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்தும், அதிமுக சட்டமன்ற குழு தலைவர் பதவி குறித்தும் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று இருந்தாலும், பெரும்பான்மை இல்லாததால் தவெக ஆட்சியமைக்க முடியவில்லை. இந்த சூழலில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 5 பேர் தங்களது ஆதரவை விஜய்க்கு தெரிவித்துள்ளது. த.வெ.க.வுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக அதிமுகவில் மாறுபட்ட கருத்துகள் நிலவி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் எஸ்.பி. வேலுமணி, கே.பி. அன்பழகன், சி. விஜயபாஸ்கர், சி.வி. சண்முகம் உட்பட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பலரும் விஜய்க்கு ஆதரவுக்குரல் எழுப்பிவருவது குறிப்பிடதக்கது.

