திருமணமாகி தனிக்குடித்தனம் செல்வோருக்கு அரசே இடம் வாங்கி வீடு கட்டித்தரும்- இபிஎஸ் அதிரடி

 
ச் ச்

நிர்வாக திறமை இருந்தால் மகளிருக்கு மாதம் 2ஆயிரம் ரூபாயும், ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண திட்டமும் செயல்படுத்தப்படும் என அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 109-ஆவது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 2026-க்கான சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், முதற்கட்டத் தேர்தல் வாக்குறுதிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். 

தமிழ்நாட்டில் 17-ஆவது சட்டமன்றப் பேரவைக்கான பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, மக்கள் நலனை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அளிக்கப்படும் முதற்கட்டத் தேர்தல் வாக்குறுதிகள்:

1. மகளிர் நலன் (குலவிளக்குத் திட்டம்):

சமூகத்தில் பொருளாதார சமநிலையை உருவாக்கிட, 'குலவிளக்குத் திட்டம்' மூலம் அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் உதவித்தொகையாக ரூபாய் 2,000 வழங்கப்படும். இத்தொகை குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

2. ஆண்களுக்கும் மகளிருக்கும் கட்டணமில்லாப் பேருந்துப் பயணத் திட்டம்:

நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களுக்குக் கட்டணமில்லாப் பேருந்துப் பயணத் திட்டம் செயல்படுத்தப்படும். ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும், நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்துப் பயணத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

3. அனைவருக்கும் வீடு (அம்மா இல்லம் திட்டம்):

'அம்மா இல்லம் திட்டம்' மூலம், கிராமப்புறங்களில் குடியிருப்பதற்குச் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கிக் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். அதேபோல், நகரப் பகுதிகளில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கி அடுக்குமாடி வீடுகள் கட்டி, 'அம்மா இல்லம் திட்டம்' மூலம் விலையில்லாமல் வழங்கப்படும்.

அதைப்போலவே, ஒரே குடும்பத்தில் வசிக்கும் பட்டியலின மக்கள், அவர்களுடைய மகன்கள் திருமணமாகித் தனிக்குடித்தனம் செல்லும்போது, அரசே இடம் வாங்கி, அவர்களுக்குக் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.

4. 100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்:

100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் 125 நாட்களாக உயர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கிராமப்புறங்களின் வளர்ச்சிக்கான இத்திட்டம், 150 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டமாக உயர்த்தப்படும்.

5. அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம்:

மகளிருக்கு ரூ. 25,000 மானியத்துடன், 5 லட்சம் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும் என்று முதற்கட்டத் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார்.

நிர்வாகத் திறமையற்ற அரசு:

தொடர்ந்து, "தி.மு.க. அரசு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குகிறது. நீங்கள் 2 ஆயிரம் ரூபாய் அறிவித்திருக்கிறீர்கள். ஏற்கெனவே கடன்சுமை அதிகமாக உள்ளது. நீங்கள் சொல்வதை எப்படிச் சமாளிக்க முடியும்?" என்று நிருபர் எழுப்பிய கேள்விக்கு,

"அவர்களுக்கு (தி.மு.க.) திறமை இல்லை; எங்களுக்குத் திறமை இருந்தது. நாங்கள் ஆட்சி செய்யும்போது 5 லட்சத்து 18 ஆயிரம் கோடிதான் கடன் இருந்தது. எந்தச் சூழ்நிலையில்? ஓராண்டுக் கொரோனா காலத்தில் கூட அரசுக்கு வரி, வருவாய் இல்லாத நேரத்தில் கூட, கொரோனா தடுப்புக்கு ரூ.40 கோடி செலவு செய்தோம். நாங்கள் திறமையாக நிதியைக் கையாண்டு, நிதிச்சுமை இல்லாமல், நிதிச்சுமை குறைவாக உள்ள சூழ்நிலையை நாங்கள் உருவாக்கித் தந்திருக்கிறோம். ஆனால், தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, நிதி மேலாண்மைக்காக நிபுணர் குழு அமைக்கப்பட்டு, அதன் மூலம் கடன் குறைக்கப்படும், வருவாய் உயர்த்தப்படும் என்று சொன்னார்கள். ஆனால், அதற்கு நேர்மாறாக நிபுணர் குழு அமைக்கப்பட்ட பிறகு கடன் தான் அதிகரித்திருக்கிறது. சுமார் இந்த தி.மு.க. ஆட்சி முடியும் தருவாயில் 5.5 லட்சம் கோடி கடன் இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

நிர்வாகத் திறமை இருந்தால் எல்லாவற்றையும் சமாளிக்கலாம். நிர்வாகத் திறமையற்ற அரசு இருக்கும்போதுதான் கடன்சுமை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

இரண்டாம் கட்டத் தேர்தல் அறிக்கை வெளியிடும்போது இன்னும் பல அறிவிப்புகள் வெளியிடப்படும். எங்களுடைய தேர்தல் தயாரிப்புக் குழு ஒவ்வொரு மண்டலமாகச் சென்று மக்களிடம் கோரிக்கைகளைப் பெற்று, அதை அறிக்கையாகத் தயாரித்து ஆய்வுசெய்து, மக்கள் என்னென்ன நினைக்கிறார்களோ அதன் அடிப்படையில் எங்கள் தேர்தல் அறிக்கை உருவாகும் எனவும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

5 தேர்தல் அறிவிப்புகளை இபிஎஸ் வெளியிட்ட நிலையில் அதிமுகவினர் அதிமுக தலைமை அலுவலகத்தில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.