எடப்பாடி மற்றும் உதயநிதி மனுக்களைத் தள்ளுபடி செய்திருக்க வேண்டும்: அண்ணாமலை பரபரப்புப் பேட்டி!
அப்போது,"டெல்லியில் தேசிய தலைவர்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. தமிழ்நாடு, புதுச்சேரி குறித்து ரிப்போர்ட் கொடுக்க வேண்டியதிருந்தது, தமிழ்நாடு தேர்தல் பிரச்சார திட்டம் குறித்தும் பேசப்பட்டது" என்று தெரிவித்தார்.
நடிகர்களின் பின்னால் இளைஞர்கள் செல்லக்கூடாது என ரஜனிகாந்த் கூறியது குறித்த கேள்விக்கு, "என்ன காரணத்துக்காக ரஜினிகாந்த் அவ்வாறு சொன்னார் என தெரியாமல் கருத்து சொல்ல முடியாது, அது தெரியாமல் பதில் சொல்வது தவறாகிவிடும்" என்று அண்ணாமலை பதில் அளித்தார்.
தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பேச்சு குறித்த கேள்விக்கு, "தமிழ்நாட்டில் அடுத்து 15 நாட்களுக்கு தரத்தோடு விமர்சனத்தை முன் வைக்க வேண்டும். தேர்தல் பிரச்சாரத்தை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பெண்கள் பார்க்கிறார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி, தாய்மார்களுக்கு மரியாதை கொடுக்கும் கூட்டணி. எனவே மக்களின் எதிர்பார்ப்புக்கு மேல் பிரச்சாரம் இருக்கும், வார்த்தைகளும் இருக்கும்.
கோவை தெற்கு தொகுதியில் 18 வேட்பாளர்கள் கரூரில் இருந்து வந்து ஒரே நோட்டரி கையெழுத்து வாங்கியுள்ளனர். தொண்டாமுத்தூர் தொகுதியில் 3 பேர் கரூர் வேட்பாளர்கள் இருக்கிறார்கள். இந்த முறை செந்தில் பாலாஜியின் தோல்வி மட்டுமல்ல, மொத்தமாக திமுக தோல்வியும் இங்கிருந்து தொடங்கி சேப்பாக்கம் வரை செல்லும்.
எடப்பாடி தொகுதியில் திமுக வேட்பாளர் வேட்பு மனுவில் அவரது மனைவியும், மனைவியின் வேட்பு மனுவில் கணவரும் கையெழுத்திட்டுள்ள்ளனர். இருவரின் மனுக்களும் தள்ளுபடி செய்திருக்க வேண்டும். உதயநிதி ஸ்டாலின் தனது முதலீடுகள் பற்றி விவரங்களை விட்டுள்ளார். அவருடைய மனுவையும் தள்ளுபடி செய்திருக்க வேண்டும்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, நான் யாரையும் பிரச்சாரத்திற்கு அழைக்கவில்லை. தன்னார்வலர்கள் தாமாக முன்வந்து வேலை செய்தார்கள். ஆனால் கரூர்காரர்கள் வீதி வீதியாக பணம், பரிசு பொருட்கள் வழங்க குத்தகைக்கு எடுத்துள்ளனர். இவர்கள் செந்தில் பாலாஜி பினாமிகள். கோவையில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களைக்கூட கரூரில் இருந்து இறக்குமதி செய்துள்ளார்கள். உள்ளூர் திமுகவினருக்கு வாய்ப்பு தரவில்லை.
நாளை முதல் என்னுடைய பிரச்சாரம் தொடங்குகிறது. முதல் நான்கு நாட்களுக்கு நான் பிரச்சாரம் செய்யும் இடங்கள் குறித்து தலைமை கூறும், எனக்கு மதுரையிலும் பிரச்சாரம் மேற்கொள்வேன்.
புதுச்சேரியில் தேர்தல் பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ற வார்த்தையையே பேசவில்லை. காங்கிரஸ் வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும் என்று ராகுல் காந்தி கூறினார். ராகுல் காந்தியும், முதல்வரும் ஒரே நாளில் பிரச்சாரம் செய்தும், இருவரையும் சந்திக்கவில்லை.
தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரத்திற்கு காவல் துறை முறையாக அனுமதி கொடுக்க வேண்டும். விஜய்க்கு கூட்டம் சேர்வதால் காவல் துறையினரின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். கூட்டம் கூடும் என்பதால் அனுமதி மறுப்பதை ஏற்க முடியாது. தேர்தல் நேரத்தில் அனைத்து தலைவர்களுக்கும் முறையாக அனுமதி கொடுத்து, பாதுகாப்பு வழங்க வேண்டும். பறக்கும் படை அதிகாரிகள் அப்பாவி மக்கள் பணத்தை மட்டுமே பிடுங்குகிறார்கள் தேர்தல் நெருங்கும்போது பல்வேறு இடங்களில் பணம் வழங்குவார்கள் அதனை தடுக்க வேண்டும்" என்றார்.



