அண்ணாமலையை தொடர்ந்து நாளை ஆளுநரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி

 
ep

தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நாளை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கிறார்.

கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் மற்றும் அக்கட்சியின் மகளிர் அணி நிர்வாகிகள் அடங்கிய குழுவினர் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பானது 20 நிமிடம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது  மனு ஒன்றையும் அளித்தனர். அதில், தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுநர் நேரடியாக தலையிட்டு மதுபானம் தொடர்பான பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர். இதேபோல் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க முதலமைச்சருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது.  

இந்த நிலையில், தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆளுநரை சந்திக்கவுள்ளார். தி.மு.க. ஆட்சியின் பல்வேறு முறைகேடுகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியும், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போதை பொருட்கள் புழக்கம், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, தொடர் மின்வெட்டு, விஷ சாராய மரணங்கள், ரூ.30 ஆயிரம் கோடிக்கு விசாரணை ஆகியவற்றை வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமி ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து  மனு அளிக்க உள்ளார்.   சைதாப்பேட்டை சின்னமலை அருகே அதிமுகவினர் பேரணியாக புறப்பட்டு ஆளுநர் மாளிகை செல்கின்றனர். அங்கு எடப்பாடி பழனிசாமி முக்கிய நிர்வாகிகளுடன் சென்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு கொடுக்கிறார்.