பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் - இபிஎஸ் மனு

 
eps

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் அமலுக்கு வந்து 8 மாதங்களுக்கு பிறகு மனோஜ் பாண்டியன் தாக்கல் செய்த வழக்கு செல்லாததாகிவிட்டது என எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.  

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் உச்சகட்டத்தை எட்டியதை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் உட்பட அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து நாங்கள் முடிவு எதுவும் எடுக்கவில்லை என்றும் சிவில் நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்து இருந்தது. 
 
இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மீண்டும் இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா என நீதிபதி கேள்வி எழுப்பினார்.  மேலும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் குறித்து விளக்கம் அளிக்க ஓ.பன்னீர் செல்வம் தரப்புக்கு 2 வாரம் அவகாசம் வழங்கி சென்னை உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை வரும் 27-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

high court

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில் மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், இந்த வழக்கை தொடுத்துள்ள மனோஜ் பாண்டியன் கட்சியின் உறுப்பினரே இல்லை. பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டுவருவதும், ஒற்றைத்தலைமைக்கு மாறுவதும் தொண்டர்கள் மற்றும் பொதுக்குழுவின் விருப்பமாகும். கட்சி விதிகளில் மாற்றம் செய்ய பொதுக்குழுவிற்கு மட்டுமே உள்ள அதிகாரத்தை மனுதாரர் கேள்வி கேட்க முடியாது. கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற வகையில் சட்ட ஆணையம் தனக்கு கடிதம் எழுதியுள்ளது. ஜி20 மாநாட்டிற்கு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட சங்க விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடாது என்பதால், உள்கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடும்படி மனுதாரர் கோரமுடியாது. பெரும்பான்மையினர் முடிவை சிறுபான்மையினர் முடக்க முடியாது. பொதுக்குழு தீர்மானங்கள் அமலுக்கு வந்து 8 மாதங்களுக்கு பிறகு மனோஜ் பாண்டியன் தாக்கல் செய்த வழக்கு செல்லாததாகிவிட்டது. எனவே அபராதத்துடன் தள்ளுபடிசெய்யவேண்டும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பதில்மனுவில் தெரிவித்துள்ளார்.