ஆளுநர் புறக்கணித்து செல்லவில்லை, திட்டமிட்டு வெளியேற்றப்பட்டுள்ளார் - ஈபிஎஸ் பேட்டி
அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் அரசு பதறுவது ஏன்? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,திமுக ஆட்சியில், ஆளுநர் உரை என்பது சபாநாயகர் உரையாக மாறிவிடுகிறது. உரையை பார்ப்பதற்கு காற்றடித்த பலூன் மாதிரி பெரிதாக உள்ளதே தவிர, உள்ளே ஒன்றும் இல்லை. ஆளுநர் உரை மாற்றப்பட்டு சபாநாயகர் உரையாக காட்சியளிக்கிறது. இந்த உரையில் திமுக அரசின் சுயவிளம்பரத்தை தவிர வேறு எதுவும் இல்லை. ஆளுநர் புறக்கணித்து விட்டுச் செல்லவில்லை, திட்டமிட்டே ஆளுநரை உரையாற்றக் கூடாது என்ற நோக்கத்துடன் செயல்பட்டிருக்கிறார்கள்.
ஆளுநர் உரையில் திமுக அரசு சுய விளம்பரம் தேடி உள்ளது. ஆளுநர் உரையில் முக்கியத்துவமான கருத்து எதுவும் இல்லை திட்டத்திற்கு பெயர் மாற்றுவது மட்டும் தான் திமுக ஆட்சியில் சாதனையாக உள்ளது. 500 பள்ளிகளை தனியாருக்கு தாரைவார்க்கும் நிலை இன்றைய ஆட்சியில் உள்ளது. போதை மாநிலமாக உள்ளது தமிழகம். போதைப்பொருள் நடமாட்டத்தை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் அரசு பதறுவது ஏன்? என கேள்வி எழுப்பினார்.