அதிமுகவுக்கும் ஓ.பி.எஸ்-க்கும் எந்த தொடர்பும் இல்லை...விரைவில் பொதுச்செயலாளர் தேர்தல் - இபிஎஸ்

 
eps

அதிமுக நிர்வாகிகள் கூடி விரைவில் பொதுச்செயலாளர் தேர்வு நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

அ.தி.மு.க. பொதுக்குழு  வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி  தேர்வு செய்யப்பட்டதும் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதேபோல் அதிமுகவி இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 

supreme court

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: நீதிமன்றம் அருமையான தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பின் மூலம் தர்மம், நீதி, உண்மை வென்றுள்ளது. சட்டப்போராட்டம் மூலம் அதிமுகவுக்கு முழு வெற்றி கிடைத்துள்ளது. அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற அற்புதமான திர்ப்பு கிடைத்துள்ளது. டிடிவி தினகரன் தனிக்கட்சி தொடங்கி போய்விட்டார்; இரட்டை இலை சின்னம் குறித்து பேச அவருக்கு தகுதி இல்லை. இனி அதிமுகவுக்கும் ஓ.பி.எஸ்-க்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்துள்ளது. ஆட்சி நீடிக்குமா? என்ற கணிப்புகளை பொய்யாக்கி 4 ஆண்டு 2 மாதங்கள் பொற்கால ஆட்சி கொடுத்தேன். 

இந்த  தீர்பால் எழுச்சியுடன் அதிமுக தனது கட்சி பணிகளை ஆற்றும். உச்சநீதிமன்றமே கூறிவிட்டதால் அதிமுக தலைமை குறித்து இனி கேள்வியே இல்லை. ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களின் பொதுச்செயலாளராக இருப்பேன். அதிமுக பொதுக்குழு தீர்மானங்களும் செல்லும் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் கூறியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு உதவும். ஒரு சிலரைத் தவிர யார் வந்தாலும் அதிமுகவில் சேர்த்துக்கொள்வோம். அதிமுக நிர்வாகிகள் கூடி விரைவில் பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறும். ஒற்றை தலைமை விவகாரத்தில் ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களின் எண்ணம் நிறைவேறியுள்ளது. இவ்வாறு கூறினார்.