மாமன்னர் பூலித்தேவனின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன் - எடப்பாடி பழனிசாமி

 
ep

விடுதலை போராட்ட வீரர் மாமன்னன் பூலித்தேவனின் 308வது பிறந்த நாளையொட்டி தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார். 

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்ட பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஆங்கில ஏகாதிபத்திய அரசுக்கு எதிராக முதன்முதலில் வாள் சுழற்றி , கம்பீரக்குரலால் சுதந்திர வேட்கை எழுப்பி, வெள்ளையனே வெளியேறு என்று  வீரமுழக்கமிட்டு எண்ணற்ற வெற்றிகளை கண்டு, தன் இறுதி மூச்சு உள்ளவரை தாய்நாட்டிற்காக போரிட்டு ஒட்டுமொத்த பாரத தேசத்திற்கும் விடுதலைப்போரில் வழிகாட்டியாக திகழ்ந்த #மாமன்னர்_பூலித்தேவன் அவர்களின்  308 வது பிறந்தநாளில் அவர்தம் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 


இதேபோல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க்கலகத்திற்கும் முன்னோடியாகக் கருதப்பட்ட மாவீரர் பூலித்தேவன் பிறந்த தினம் இன்று. இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில், வெள்ளையனே வெளியேறு என்று முதன் முதலாக 1751 ஆம் ஆண்டிலேயே வீர முழக்கமிட்டவர் நெற்கட்டான் செவல் பகுதியை ஆண்ட மன்னர் பூலித்தேவன். ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக, தம் வீர வாளை உயர்த்திய மாவீரர். திருநெல்வேலிச் சீமையில் உள்ள பல கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொண்டு ஆலயங்களுக்கு அணிகலன்கள் வழங்குவது, குளம் அமைத்துக் கொடுத்தது என நாட்டுப்புறப் பாடல்களும் செப்பேடுகளும் இவர் பெருமையைக் கூறுகின்றன. வீரத்தில் மட்டுமல்ல, இறைபணியிலும் சிறந்து விளங்கிய மாவீரர் பூலித்தேவன் அவர்கள் பெருமையைப் போற்றுவோம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.